ஆத்திசூடி

ஆத்திசூடி அவ்வையார் இயற்றிய அறநால்களுள் ஒன்றாகும். 'பிற்கால அவ்வையார்' என்று மதிக்கப்பெறும் இப்பெண்பாற் புலவர்  கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது அறிஞர்களின் துணிபு. 'அவ்வையார்' என்னும் சொல்லுக்கு 'வயது முதிர்ந்த பெண்' என்பது பொருள்.' 'ஆத்திசூடி' என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவபெருமானைக் குறிக்கும்.  'ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே'  (ஆத்தி மாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமானது விருப்பத்திற்குரிய விநாயகரை நாளும் தவறாது பலமுறை வாழ்த்தி வணங்குவோமாக) என்னும் வரியுடன் தொடங்கும் கடவுள் வாழ்த்துப் பாடலின் (காப்புச் செய்யுளின்) முதல்சொல் இந்நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.

இந்நூல் 109 அடிகளைக் (நூற்பாக்களைக்) கொண்டுள்ளது. இந்நூலில் உள்ள அடிகள் அகர வரிசையில் அமைந்துள்ளன. படிக்கின்றவர்கள் தாங்கள் படித்தவற்றை மனத்தில் எளிதில் பதிய வைப்பதற்கு இந்த அகர வரிசை உதவும். இந்நூல் எளிமையான நூல் அமைப்புடன் எளிய சொற்களில் அமைந்துள்ளது. எனவே, இந்நூல் தோன்றிய காலம்முதல் இன்றுவரை அனைவராலும் படிக்கப்படுகின்றது. ஓரடிப் பாடல்களைக் கொண்ட ஆத்திசூடியில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களும் நீதிகளும் அடங்கியுள்ளன.

சில தெரிவு செய்யப்பட்டப் பாடல்களையும் (மலேசிய தேசிய வகை தமிழ் தொடக்கநிலைப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ்மொழிப் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஆத்திசூடிப் பாக்கள்) அவற்றுக்கான விளக்கங்களையும் கீழே காணலாம். மாணவர்கள் அவற்றைக் கவனமுடன் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கமும் அவாவுமாகும்.

1.  அறஞ்செய விரும்பு. 

அனைவருக்கும் நன்மை தரும் அறச்செயல்களைத் (அதாவது, பிறருக்குக்  கொடுத்து வாழ்கின்ற பண்பு; வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகள் ஆகியவை)  தவறாமல் செய்வதற்கு விரும்புவாயாக.

2.  ஆறுவது சினம்.

சினத்தை (கோபத்தை) அடக்க வேண்டும். சினம் ஒருவனை நிலைகுலையச் செய்துவிடும். எனவே,  எவருடனும் கோபம் கொள்ளக்கூடாது.

3.  இயல்வது கரவேல்.

உன்னால் பிறருக்குக் கொடுக்கக்கூடிய பொருளைக் கொடுக்காமல் மறைக்காதே; உன்னால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். வறுமை நிலையை அடைந்த ஒருவர், பொருள் வேண்டி வந்து நின்றால் அந்தப் பொருளை அவருக்குத் தயங்காமல் வழங்கிட வேண்டும். நம்மால் கொடுக்கக் கூடியதை, 'இல்லை' என்று சொல்லி அப்பொருளை மறைத்து வைக்கக்கூடாது என்றும் பொருள் கொள்ளலாம்.

4.   ஈவது விலக்கேல்.

ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவும் நல்ல பண்பினை விட்டுவிடாதே; பிறருக்கு உதவி செய்வோரையும்  வேண்டாமென்று தடுக்காதே.

5.  உடையது விளம்பேல்.

உன்னிடத்தில் உள்ள பொருளைப் பற்றி அல்லது உள்ளத்தில் உள்ள இரகசியங்கள் பற்றி நீயாகவே வலிய சென்று பிறரிடம் சொல்லாதே.

6.  ஊக்கமது கைவிடேல்.

தடங்கல் ஏற்படினும் நற்செயல்களைச் செய்யும் முயற்சியைத் தளர விடாதே அல்லது கைவிடாதே.

7.  எண் எழுத்து இகழேல்.

எண்கள் சம்பந்தப்பட்ட கணிதம், எழுத்துகள் சம்பந்தப்பட்ட இலக்கணம் / இலக்கியம் ஆகியவை கடினம் என்று தவறாக எண்ணி  அல்லது வீண் என்று இகழ்ந்து அவற்றைக் கற்காமல் / படிக்காமல் இருக்காதே.

8.  ஏற்பது இகழ்ச்சி.

பிறரிடம் சென்று கையேந்தி ஒன்றைக் கெஞ்சி அல்லது  'கொடு' என  இரந்து அல்லது யாசித்துப் (பிச்சை கேட்டு)  பெறுவது இழிவான செயலாகும்.

9.  ஐயம் இட்டு உண்.

பசியென வந்தவர்க்கு அல்லது பசித்த எளியவர்க்கு அல்லது யாசிப்வர்களுக்கு (பிச்சை கேட்பவர்களுக்கு) உணவளித்த பிறகே நீ உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு.

உலக மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழவேண்டும்.  உலக நடைமுறைக்கு மாறுபட்டு வாழ்பவன் தனிமரமாகி நிற்பான். இதே கருத்தைத் திருவள்ளுவரும்

               உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

               கல்லார் அறிவிலாதார்

என்று பாடியுள்ளார்.  இதன் பொருள் என்னவென்றால், உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றறிந்தபோதிலும் அறிவில்லாதவரே ஆவர். (டாக்டர் மு.வரதராசனார்).  இதே கருத்தை 'ஊரோடு ஒத்துப் போ' அல்லது 'ஊரோடு ஒத்து வாழ்' என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

11. ஓதுவது ஒழியேல்.

நல்ல நூல்களை நாளும் படிப்பதை விட்டுவிடாதே.  கற்க வேண்டிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தேகம் தீரப் படிக்க வேண்டும். படிப்பதை மட்டும் விட்டுவிடக்கூடாது.

12. ஒளவியம் பேசேல்.

எவரிடமும்  பொறாமை கொண்டு எதையும் பேசாதே. பிறரிடம் உள்ள அறிவு, பொருள் ஆகியவற்றைக்  கண்டு பொறாமையாகப் பேசாதே. ஏனெனில்,  அவ்வாறு பேசுவதால் அவர்களை நமது பகைவர்களாக உருவாக்கி விடுகிறோம். பொறாமை நம்மை அழித்துவிடும்.