சிங்கப்பூரில்  தமிழும் தமிழ்க் கல்வியும்

  பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்*

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிம் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.

சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில்  உள்ள ஒரு சிறு தீவு. அதன் பரப்பளவு  715.8 சதுரக் கிலோ மீட்டர்.  அதன் மக்கள் தொகை  5.3 மில்லியன்.  இவர்களில் சீனர்கள் 74%,  மலாய்க்காரர்கள் 13.6%, இந்தியர்கள் 9.4%,  ஏனையோர் 3%. இந்தியர்களில் 65% தமிழர்கள். ஏனையோரில் மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்திகள், பஞ்சாபியர் முதலியோர் அடங்குவர்.  இங்கு வாழ்வோரில் பௌத்தம், தௌவிசம் ஆகிய சமயத்தினர் 51 %, இசுலாமியர்கள் 15 %, கிறித்துவர் 15% , இந்துக்கள் 4% சதவீதம்.  சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய் மொழி. சீனம், மலாய், தமிழ் , ஆங்கிலம் ஆகிய நான்கும் அதிகாரத்துவ மொழிகள். இருப்பினும்,  ஆங்கிலமே அலுவலக மொழியாகவும், கல்வி நிலையங்களில் பயிற்றுமொழியாகவும், பல்வேறு இனத்தவரின் தொடர்பு மொழியாகவும் கோலோச்சுகிறது.  சிங்கப்பூர் ஒரு குடியரசு நாடு. இப்போது  அதிபராக (குடியரசுத் தலைவராக) இருப்பவர் டாக்டர் டோனி டான். இவருக்கு முன் 12 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் திரு எஸ். ஆர். நாதன் என்னும் தமிழர். இவர் பொதுமக்களால் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்.

சிங்கப்பூரின் பழைய பெயர் சிங்கபுரம். இப்பெயர் சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி தொடர்பான ஓர் ஊர்ப் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே பெயரளவில்  சிங்கப்பூருக்கும் சிங்கபுரத்துக்கும் ஒரு தொடர்புள்ளது. நவீன சிங்கப்பூரைக் கிழக்கு இந்தியக் கம்பெனியைச் சார்ந்த சர் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ் என்னும் ஆங்கிலேயர் 1819- இல் உருவாக்கினார்.  இவரோடு பினாங்கிலிருந்து வந்த நாராயணபிள்ளையும்  ஏனைய தமிழர்களுமே, தமிழ் இந்நாட்டில் வழங்கக் காரணமாவர்.  பிறகு, தமிழகத்தின் சோழ மண்டலப் பகுதியிலிருந்து தமிழர் பலர் இந்நாட்டில் பல்வேறு பணிகளைச் செய்யக் கொண்டுவரப்பட்டனர்.  இவர்கள் இங்கே தங்கி வாழ்ந்தனர்.   இவர்கள் சோழியர் எனப்பட்டனர். சோழியர் தெரு என ஒரு தெரு இன்றும் இங்கு உள்ளது.   1824 இல், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இங்கு வந்து கொடுக்கல், வாங்கல் தொழில் நடத்தத் தொடங்கினர். இலங்கையிலிருந்தும் தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்து பல்வேறு அலுவலகப் பணிகளில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது தமிழகத்திலுள்ள கடலூரைச் சார்ந்த சேஷாசலம் பிள்ளை என்பவர் இக்கோயிலிலுள்ள இராமர் திருவடிக்கு 1828 இல் கொடுத்த நன்கொடை பற்றிய குறிப்பு ஒன்று இக்கல்வெட்டில் உள்ளது. இதுவே இங்குள்ள முதல் தமிழ்க் கல்வெட்டாகும்.                                                                                                                               

     மலேசியா, சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும் போது சிங்கப்பூரில்தான் முதல் தமிழ் இலக்கியம் உருவாயிற்று. 1887-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சதாசிவ பண்டிதரால் இயற்றப்பட்டுச் சிங்கப்பூரிலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட சிங்கைநகர் அந்தாதி, சித்திரக் கவிகள் என்னும் இரண்டு நூல்களாகும்.  இது புலவர் இலக்கியம்.  இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் இலக்கியமாக 1893இல், ரங்கசாமிதாசன் என்பவர் குதிரைப் பந்தய லாவணி என்னும் நூலை இயற்றியுள்ளார்.

     சிங்கப்பூரில் முதல் சீனமொழி நாளிதழ் 1881-ஆம் ஆண்டில் தோன்றுவதற்கு முன்னரே, தமிழ் மொழியில் செய்திப் பத்திரிகை இருந்தது என ஆய்வாளர்கள்   கூறுவார்கள். (திருநாவுக்கரசு வை. 1979: 72) 1887 இல் சிங்கையிலிருந்து வெளிவந்த சிங்கைநேசன் என்ற வார இதழ்தான் இப்போது  காணக்கிடைக்கும் முதல் தமிழ்ப் பத்திரிக்கை. இதன் முதல் தலையங்கம், ஏற்கெனவே நடந்து நின்று போன சிங்கை வர்த்தமானி , தங்கை நேசன், ஞான  சூரியன் ஆகிய தமிழ்ப் பத்திரிக்கைகளைக் குறிப்பிடுகிறது. ஆயினும் இவை கிடைக்கவில்லை. இப்போது சிங்கையில் இருக்கும் ஒரே தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆகும். இது மலேசிய சிங்கப்பூர்த் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடற்கரியது. 1924இல் தமிழகம் திருவாரூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி சிங்கை மலேசியத் தமிழ் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் எனலாம். தமிழ் எங்கள் உயிர் என்னும் குறிக்கோளுடன் நிதி திரட்டி அவர் 1956-இல், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மையாகக் கொண்ட இந்திய ஆய்வுத் துறை தொடங்க வழி செய்தார். பின்பு 1959-இல், இத்துறை கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.

    சிங்கப்பூரில் இப்போது வானொலி 96.8 ஒலி என்பது இருபத்து நான்கு மணிநேர தமிழ் ஒலிபரப்பினைச் செய்து வருகிறது.  தொலைக்காட்சியும் நாள்தோறும் கணிசமான அளவில் தமிழ் ஒளிபரப்பினைச் செய்து வருகிறது.  இவற்றின் தமிழ்ச் செய்தி அறிக்கைகளில் நல்ல தமிழ் நடமாடும். இவற்றின் வாயிலாகத் தமிழ் மொழியும் இலக்கியமும் சிங்கப்பூரில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.

    தமிழ் மொழியில் அண்மையில் ஏற்பட்ட 13 எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய சிந்தனையைப் பெரியாருக்கு முதன்முதலில் எழுதிக் கட்டுரையாகக் குடியரசுஇதழில் 1933இல் வெளியிட்டவர் சிங்கப்பூரைச் சார்ந்த அ.சி. சுப்பையா என்பவரே ஆவார்.  தமிழக அரசு அறிவித்த எழுத்துச் சீர்திருத்தத்தை 1982இல் முதன் முதலில் ஏற்றுச் செயல்படுத்தியதும் சிங்கப்பூரே ஆகும்.

   தென்கிழக்காசியாவிலேயே தொடக்க நிலை முதல் உயர்நிலை இறுதிவரை தமிழில் பல பாடங்களைக் கற்பித்த ஒரு பள்ளியாக - ஓர் உயர்நிலைப்பள்ளியாக உமறுபுலவர் தமிழ்ப்பள்ளி 1946 முதல் இருந்தது.  பிறகு 1982  இல் மூடப்பட்டது.  இதில் பயின்ற பலர் சிங்கப்ப்பூரில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றி வந்தனர்,  வருகின்றனர்.

   தென்கிழக்காசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக அமைந்துள்ளது.   இது அரசியல் அமைப்புச் சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும் .  இதனால் விளைந்த விளையும் நன்மைகள் பலப்பல.  சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் வாய்ப்புள்ளது.  தமிழில் ஒருவர்   பேசுவதை ஆங்கிலத்தில்  மொழி பெயர்ப்பதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் அங்கு வசதிகள் உள்ளன.  அரசாங்க அலுவலகங்களில் பெயர்கள், அறிவிப்புகள், விளம்பரங்கள் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூர் விமானங்களிலும் பயணிகளுக்கான அறிவிப்புகளும்  பாடல்களும் தமிழில் உள்ளன. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், புருணை முதலிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான்  மட்டத்தில் நடைபெறும் இலக்கியப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தமிழுக்கு ஓர் இடம் தந்து அதனைக் கொண்டு நிறுத்தும் உரிமை சிங்கப்பூருக்கே உண்டு.  இதனால் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர்கள் ஆசியான் இலக்கிய விருதைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.  சிங்கப்பூர் அரசாங்கச் சார்பு நிறுவனங்கள் ஆண்டு தோறும் நடத்தும் விருதுகள் பத்தாயிரம் வெள்ளிப் பரிசுகள், போட்டிகள் அனைத்தும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைக்கின்றன.

   சிங்கப்பூரில் கவிதை, சிறுகதை ஆகியவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.  சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது.  தமிழ் மொழி வளர்ச்சி, கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கெனப் பலவகைத் தமிழ் அமைப்புக்கள் உள்ளன.  ஆன்மிகத் தமிழ் வளர்ச்சிக்கெனச் சிங்கப்பூரில்  கோயில் அறங்காவலர்களும் திருமுறை மாநாட்டினரும் பாடுபடுகின்றனர்.

  சிங்கப்பூர்த் தமிழர்களின் எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் ஆகியவற்றில் சில சிறப்பு இயல்புகள் தென்பட்டாலும் இலங்கைத் தமிழ்போலத் தனிக்கிளைமொழியாக இதைக் கருத வாய்ப்பில்லை.  பொதுவாக  இல்லங்களில் தமிழ் பேசும் போக்கு குறைந்து கொண்டே வருகிறது.  ஆங்கிலத்தின் செல்வாக்கு மேலோங்கி வருகிறது.  இந்த வகையில் பேச்சுத் தமிழின் புழக்கத்தை அதிகரிக்கும் பணியே இப்போது சிங்கப்பூரில் முதன்மைப் பணியாக உள்ளது. 

தமிழ்க்கல்வி

  பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், உலக வாணிபம் ஆகியவற்றிற்காக ஆங்கிலமும்: பண்பாடு, கலச்சாரம், பழக்கவழக்கங்களைப் பேணுதல் ஆகியவற்றிற்காக தாய்மொழிக் கல்வியும் எல்லாருக்கும் தேவை எனும் அடிப்படையில் சிங்கப்பூர்க் குடியரசு இருமொழிக் கொள்கையினை இன்றியமையாத ஒரு கொள்கையாகச் செயல்படுத்தி வருகிறது. இதனால் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் தொடக்கக் கல்லூரிகளிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் கற்கும வாய்ப்பினை அரசு வழங்கியுள்ளதுஎனவே தமிழர் குழந்தைகள் மாணவர்கள் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக ஆங்கிலத்துடன் பயிலும் நிலை சிங்கப்பூரில் உள்ளதுஇப்போது தொடக்க நிலையில் சுமார் 15000 மாணவர்களும், உயர்நிலையில் சுமார் 9000 மாணவர்களும், பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு நிலையில் சுமார் 700க்கு மேற்பட்ட மாணவர்களும் தமிழ் பயில்கின்றனர்ஏறத்தாழ 25000 மாணவர்கள் தமிழ் கற்கின்றனர் இவர்களுக்கு  147 தொடக்கப் பள்ளிகளும், 70 உயர்நிலைப்பள்ளிகளிலும் 9 உயர்நிலை மொழி நிலையங்களிலும் 16 தொடக்கக் கல்லூரிகளிலும் ஒரு மத்திய கல்வி நிலையத்திலும்  தமிழ் கற்பிக்கப்படுகிறதுஇக்கல்வி நிலையங்களில் 600 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழ் கற்பிக்கின்றனர். இவர்களில் 50 க்கு மேற்பட்டோர் தமிழகத்திலிருந்து வந்து தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழக அளவில் நன்யாங்தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தேசியக் கல்விக் கழகத்திலும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும்  தமிழ் பயிற்றப்படுகிறது.

  ஆங்கிலமே கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாகும். சிங்கப்பூரிலுள்ள பல பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கற்க வாய்ப்புள்ளது. தமிழ் கற்பிக்கப்படாத உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மொழி நிலையங்களில் பள்ளி நேரத்திற்கு அப்பால் தமிழ் பயில்கின்றனர்ஒன்பது தமிழ் மொழி நிலையங்களுள் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் கல்வியமைச்சின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் ஒன்றாகும். மேலும், இந்நிலையம் இன்று சிங்கப்பூரில் தமிழ் மொழி கற்றல் கற்பித்தலுக்கான வளமை நிலையமாகவும் விளங்குகிறது.

   சிங்கப்பூரின் தமிழ்க்கல்வி நிலையை இருவகையாக நோக்கலாம். ஒன்று தமிழ் வழிக்கல்வி: மற்றொன்று தமிழ்மொழிக் கல்வி: முன்னையது தமிழ் பயிற்று மொழியாக இருந்தநிலை: பின்னையது ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் தமிழ் தாய்மொழி நிலையில் பயிலப்பெறும் நிலை.

தமிழ்வழிக்கல்வி

   தமிழ்வழிக்கல்விப் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகள் என அழைத்தனர்.  சிங்கப்பூரில் முதல் தமிழ்ப்பள்ளி 1934இல் செயற்படத் தொடங்கியது.  1951இல் ஏறத்தாழ 20 தமிழ்ப் பள்ளிகளில் ஆயிரம் மாணவர் இருந்தனர். இவை அனைத்தும் தொடக்கப்பள்ளி நிலையில் தமிழ்மொழி வாயிலாகப் பலவகைப் பாடங்களைக் கற்பித்து வந்தன. இந்நிலையில் 1960 இல் உயர்நிலையிலமைந்த தமிழ்ப்பள்ளியாக உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி உருவாயிற்று. 1965 ஆம் ஆண்டு முதல் ஆங்கில. சீன , மலாய்ப்பள்ளிகளின் இறுதிச் சான்றிதழுக்கு  இணையாக உமறுப்புலவர் பள்ளி விளங்கியது.

  இந்நிலையில் தமிழ் வாயிலாகக் கல்வி பயின்ற மாணவர் எண்ணிக்கை 1968இல் 1843 ஆக இருந்ததுஆங்கிலத்தின் செல்வாக்குச் சிங்கப்பூர் மக்களிடையே படிப்படியாக வளர்ந்து வலுவுற்றதால் தாய்மொழிவழிக்கல்வி கற்பவர் தொகை குறைந்தது. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டன.  1982இல் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியும் மூடப்பட்டதுதமிழ்ப்பள்ளிகளே சிங்கப்பூரில் இல்லாத நிலை உருவாகிவிட்டது! பாரதிதாசன், அரவிந்தர், நாகம்மையார், நீலாம்பிகை, சாரதாதேவி, வள்ளுவர், வாசுகி, விவேகானந்தர் முதலியோர் பெயரால் அக்காலத் தமிழ்ப்பள்ளிகல் இயங்கின.

தமிழ் மொழிக்கல்வி

  சிங்கப்பூரில் தமிழ் இரண்டாம் மொழியாக ஆங்கிலப்பள்ளிகளில் 1951 முதல் கற்பிக்கப்பட்டது.  1952 இல் 32 பள்ளிகளில் இவ்வாய்ப்பு இருந்தது.  1968 இல் 13000 மாணவர்கள், ஆங்கிலப்பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாகப்பயின்றனர்.  1966 இல் உயர்நிலையில் தமிழ் கற்றோர் தொகை 2712 ஆகும். 1968 முதல் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு நிலையிலும் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.

  இன்று ஆங்கிலப்பள்ளிகளில் பாலர் தொடக்க நிலை முதல் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புவரை, தமிழ் ஒரு தாய் மொழிப்பாடமாக இருக்கும் நிலையைக் காணுகிறோம்.

   பாலர் பள்ளி நிலை

 தனியார் பாலர் பள்ளிகள், மக்கள் கழகப் பாலர் பள்ளிகள். மக்கள் செயல்கட்சி அறக்கட்டளைப் பாலர் பள்ளிகள், இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் உள்ள சரசுவதி பள்ளி, சாரதா பள்ளி, கல்சா பாலர் பள்ளிகள் என்று பல பள்ளிகளில், தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறதுஇவற்றில் பலர் படிக்கும் வாய்ப்புள்ளதுபாலர் பள்ளி முதல் வகுப்பு மாணவர்களுக்குரிய புத்தகங்கள் நான்கும், பயிற்சிப் புத்தகங்கள் நான்கும் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறே பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் எட்டுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனபடிக்க எளிய முறையில் படங்களுடன் கவர்ச்சியான வடிவத்தில் இப்புத்தகங்கள் அமைந்துள்ளன.   மக்கள் கழக இந்திய நற்பணிக்குழுவின் சார்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறதுஅரசு தொடக்கப்பள்ளி சிலவற்றிலும் ஓராண்டு ஆயத்தவகுப்பு நிலையில் தமிழ் கற்பிக்கப்பட்டது. இதனை ஒட்டிச் சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் தொடக்க நிலைக்கு முந்திய நிலையான ஆயத்த நிலைக்குரிய பயிற்றுகருவிகள் பலவற்றைத் தமிழுக்கு உருவாக்கியுள்ளதுஒலி நாடாவிலும் , இன்னோசை வரிகளும் பாடல்களும் ஓசைநயமும் தரப்பெற்றுள்ளனபல்வேறு கருப்பொருள்களை ஒட்டிய வண்ணப்படங்களுடன் பயிற்சித்தாள்கள் ஒளிநாடா ஆகியவை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளனஅண்மையில் சிங்கப்பூர் இந்தியர் நல மேம்பாட்டுக்கழகம் பாலர் பள்ளி நிலையினர் படிக்கத்தக்க நான்கு நூல்களைப் பெரும் பொருட் செலவில் வெளியிட்டுள்ளதுஇன்று தொடக்கநிலை முதலாம் வகுப்புக்கு  வரும் மாணவரும் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் பாலர் பள்ளியில் தமிழ் படித்துவந்தவர்களாவர். இதனை ஒரு நல்ல அறிகுறியாகக் கருதலாம்.

   தொடக்கநிலை

    தொடக்கநிலைப் பள்ளிகளில் முதல் நாலாண்டு தமிழ் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றுடன் தாய்மொழிப்பாடமாகத் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நான்காம் ஆண்டின் இறுதியில் மாணவர்கள் மூன்று மொழி நிலையில் தரம் பிரிக்கப்படுகிறார்;கள்மிகவும் சிறந்த முறையில் கல்வி கற்கும் ஆற்றலுடையவர்கள் ஆங்கிலத்தையும் தமிழ்மொழியையும முதல் மொழி நிலையில் கற்கிறார்கள்இதனை உயர் தமிழ் என்பர் கற்றலில் சாராசரி ஆற்றலுடையவர்கள் ஆங்கிலத்தை முதல் மொழி நிலையிலும் கற்பார்கள்இது தமிழ்  என்ற பெயர் பெறும் . கல்விகற்பதில் மிகவும் குறைந்த ஆற்றலுடையவர்கள், ஆங்கிலத்தை முதல் மொழி நிலையிலும் தமிழை மூன்றாம் மொழி நிலையிலும் வாய்மொழித் திறனுக்கு முக்கியத்துவம் தரும் நிலையிலும் கற்பார்கள். இதனை அடிப்படைத் தமிழ்  என்பர். தொடக்கநிலை இறுதிவகுப்பான ஆறாம் வகுப்பின் இறுதியல் அரசுத் தேர்வு இம்மூன்று நிலைப்பிரிவினர்க்கும் உண்டு.

உயர்நிலை

    தொடக்க நிலையில் உள்ளது போன்றே, உயர்நிலையிலும் மாணவர்கள் எந்தக் கல்விப் பிரிவில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர் எந்த நிலை அதாவது உயர்தமிழ், தமிழ், அடிப்படைத்தமிழ் ஆகியவற்றில் எந்நிலையில் தமிழ் கற்கவிருக்கிறார் என்பது முடிவு செய்யப்படும். உயர்நிலைக் கல்வி இறுதித் தேர்வில் சிறந்த முறையில் தேறியோர் நான்கு ஆண்டுகள் பயில்வர். இவர்கள் விரைவு வகுப்பினர். இவர்கள் தமிழை முதன்மொழி நிலையிலும் (உயர் தமிழ் நிலையிலும்) பயில்வர். சராசரி ஆற்றல் நிலையில் தேறியோர் வழக்க நிலை வகுப்பினர். இவர்கள் தமிழை இரண்டாம் மொழிநிலையில் பயில்வர். மிகக்குறைந்த நிலையில் இவர்கள் அடிப்படைத் தமிழை வாய்மொழி நிலையில் பயில்வர். உயர்தமிழ் பயிலும் வாய்ப்பு ஒரு சில பள்ளிகளில்தான் உண்டு. உயர்நிலையில் இறுதி ஆண்டின் இறுதி வழக்க நிலை பயில்வார்க்கும் மூன்று வகைத் தமிழ் மொழி பயில்வார்க்கும் ஜி.சி. இ சாதாரண நிலையில் அரசுத் தேர்வு நடத்தப்படும்நான்காம் ஆண்டின் இறுதியில் வழக்கு நிலை பயில்வார்க்கும்  அரசுத் தேர்வுண்டுஜி. சி.   சாதாரண நிலைத் தேர்ச்சிக்குத் தமிழ் இலக்கியப் பாடமும் உண்டு. உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இப்பாடம் கற்பிக்கப் படுகிறதுஇத்தேர்வு எழுதுவோரில் பெரும்பாலோர் தனி நிலையில் படித்தே எழுதுகின்றனர்ஏனையபாடங்களில் நல்ல தேர்ச்சி பெற்றுத் தமிழ்  பயிலச் சிரமப்படும் மாணவர்களுக்கான தமிழ்மொழிB என்னும் பாடத் திட்டமும்  அண்மையில் புகுத்தப் பட்டுள்ளதுமேலும் சுயேச்சைப் பள்ளிகள் தமக்கெனத் தமிழ்ப் பாடத் திட்டம் வகுக்கும் உரிமையும் அண்மையில் பெற்றுள்ளனஇதனால் சிங்கப்பூரில் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு நிலைகளில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

புதுமுக வகுப்பு நிலை

   பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு நிலையில் தமிழ் மட்டுமே கற்பிக்கப் படுகிறது. உயர் தமிழ் தனியாராகத் தேர்வு எழுதுவோர் மட்டுமே படிக்கும் பாடமாகும்தமிழ்மொழிப் பாடத்தில் இருவகை நிலை உண்டுஒன்று மேல்நிலைச் சாதாரண நிலைத் தேர்ச்சி, மற்றொன்று மேல்நிலைத் தேர்ச்சிஇவற்றில் முன்னைய நிலை மட்டும் படித்தால் போதும்இருநிலையிலும் எழுதி மேல்நிலைத் தேர்ச்சியும் பெறலாம்மேல்நிலைத் தேர்ச்சி பயில்வோர் சாதாரண நிலைத் தேர்ச்சித்  தாள்களுடன் ஒரு நாடக நூல், ஒரு புதினம், ஒரு சிறுகதை நூல், ஒரு கவிதை நூல் அடங்கிய மேல்நிலைத் தாளும் எழுத வேண்டும். ஈசூன் தொடக்கக் கல்லூரி ஆண்டு தோறும் கருத்தரங்கு வழி தமிழ்க் கல்வி சிறக்க உதவுகின்றதுசில தொடக்கக் கல்லூரிகள் நாடகம், பேச்சுப் போட்டிகள் நடத்துகின்றன.

பாடத் திட்டம்

   கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத் திட்ட வரைவுப் பிரிவு , மேற்கண்ட  தொடக்க, உயர் நிலைகளுக்குரிய பாடத் திட்டங்களை உருவாக்குவதுடன் பாடத் திட்டச் செயலாக்கப் பணியிலும் ஈடுபட்டு வருகிறதுஇப் பிரிவு 1980 களின்  தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட பாடத் திட்டத்தைக் கல்வித் திட்டத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இப்போது திருத்தி அமைத்துள்ளதுஇப் பாடத் திட்டம் 1995 முதல் கட்டங் கட்டமாக அறிமுகப் படுத்தப் படும்இது கருப்பொருள் சார்ந்த கருத்துப் பரிமாற்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டதுஇதில் முக்கிய மொழி நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். கற்றலும் கற்பித்தலும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இயங்கும்இது மாணவர் நிலைக்கேற்ப நெகிழ்வுத் தன்மை உடையதுநோக்கங்களும் குறிக்கோளும், அணுகுமுறை, கருப்பொருள்கள், தலைப்புகள், நடவடிக்கைகள், நுண்திறன்கள், கருத்துப் பரிமாற்ற நடவடிக்கைகள், மொழிக் கூறுகள், மதிப்பீட்டு விளக்க குறிப்புகள் ஆகியவை இப்பாடத்திட்டத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளனமொழிக் கூறுகள் பயன்பாட்டு; நோக்கில் தரப்பட்டுள்ளனநவீன மொழியியற் சிந்தனைகளும் மரபிலக்கணக் கூறுகளும் இதில் இடம் பெற்றுள்ளனபுகுமுக வகுப்பிற்கான பாடத் திட்டமும் பாட நூல்களும் தனியே உள்ளன.

பயிற்று கருவிகள்

   கல்வியமைச்சு உருவாக்கிய பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்று கருவிகளை உருவாக்கக் கல்வி அமைச்சின் சிங்கப்பூர்ப் பாடத் திட்ட மேம்பாட்டுக் கழகம் தொடக்க நிலைக்கும் உயர்நிலைக்கும் தனித்தனியே இரு பாட நூலாக்கக் குழுக்களை 1983 இல் உருவாக்கியதுஇக் குழுக்கள் தொடக்க நிலை முதல் உயர்நிலை நான்கு வரை பலவகைப் பயிற்று கருவிகளை உருவாக்குகின்றனபாடநூல் பயிற்சிநூல், ஆசிரியர் கையேடு, படவில்லைகள், மின்னட்டைகள், பட அட்டைகள், மொழி விளையாட்டு ஒலி நாடா, ஒளி நாடா, ஒளி ஊடுருவித்தாள், ஒலி, ஒளிப் படைப்பு, உரையாடல், கட்டுரைப் படங்கள், பெரிய புத்தகங்கள் எனப் பல்வேறு வகையான பயிற்று கருவிகளைத் தமிழ்க்கெனப் படைத்தளித்த பெருமை சிங்கப்பூருக்கு உண்டு. உலகின் வேறு எங்கும் இல்லாத முயற்சி என இதனைப் பாராட்டடலாம் 1994 முதல் புதிய பாடத் திட்டத்திற்கேற்பப் பயிற்று கருவிகள் உருவாக்கப்படுகின்றன. ஒலித்தட்டு வழிக் கேட்டல், கருத்தறிதல் பாடங்கள் இப்போது தரப்படுகின்றனசிங்கப்பூர்ப் பாடத் திட்ட மேம்பாட்டுக் கழகம் கலைக்கப் பட்டபின் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத் திட்ட வரைவுப் பிரிவு பயிற்று கருவிகள் உருவாக்கும் பணியைச் சிறப்பாகச் செய்கிறதுகல்வி அமைச்சின் தொழில் நுட்பப் பிரிவு தமிழ்க் கல்விக்கெனக் கணினி சார்ந்த கல்வி மென்பொருள் பலவற்றைத் தயாரித்துத் தருகிறதுநம் நாடி என்னும் கணினிசார் இதழ் ஒன்றையும் நடத்தி மாணவர் அறிவையும் எழுத்தாற்றலையும் பெருக்குகிறது.

தேர்வு

   தமிழ்ப் பாடத்தின் தேர்வு மதிப்பீடு நடவடிக்கைகளைக் கல்வியமைச்சின் தேர்வுப் பிரிவு நடத்தி வந்தது. மாணவரின் மொழித்திறன் தேர்ச்சியை மதிப்பிட்டறியும் முறையே முதன்மை பெறுகிறது. பாடப் பொருளறிவைச் சோதித்தறியும்; முயற்சியில்லை. படித்தல், பேசுதல், கருத்தறிதல், கட்டுரை எழுதுதல், மொழிப் பயிற்சி ஆகியவற்றில் மாணவர் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டறிவதற்காகவே தேர்வு இருக்கிறது. இப்போது தேர்வு நடத்துவதற்குத் தனி வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்பாகவே இப்போது தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சித் திறன் கணிப்பும் அடிக்கடி செய்யப்படுகிறது. தேர்வுத்தாள் தயாரித்தல், திருத்துதல் ஆகியவற்றிற்கான பயிலரங்குகளும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது இந்த வாரிய அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன.

அறநெறிக்கல்வி

   தொடக்கப்பள்ளி நிலையில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை அறநெறிக்கல்வி எனும் பாடம் மட்டும் தமிழ் மொழியில் தமிழாசிரியர்களால் நடப்படுகிறது. இதற்கெனப் பாட நூல்கள், பல்வகைப் பயிற்றுக் கருவிகளை உருவாக்கச் சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் நற்குடி மக்கள்;; எனும் பாடநூலாக்கக் குழுவை உருவாக்கியது. இப்பாடத்திற்குத் தேர்வு இல்லை. இதற்கும் பல்வகைப் பயிற்று கருவிகள் உள்ளன. கல்வியமைச்சே இப்பயிற்று கருவிகள் உருவாக்குவதில் இப்போது ஈடுபடுகிறது. சிங்கப்பூர் தொடர்பான கருத்துகள், பழக்கவழக்கங்கள் இக்கருவிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழில் இவற்றை அறிய இவை உதவுகின்றன.

கல்வியமைச்சு

   கல்வியமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவு மூத்த தமிழாசிரியர் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவருக்குப் பேச்சுப் போட்டி, விவாதப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றை ஆண்டுதோறும் நடத்துகிறது. ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகளும் நடத்துகிறது. பயிற்று கருவிகள் களஞ்சியம் ஒன்றும் உருவாக்கியுள்ளது. ஆண்டுதொறும் தமிழாசிரியர் ஒரு சிலரைத் தமிழகத்தில் இளங்கலை (தமிழ்) பட்டப் படிப்புப் பெற அமைச்சு அனுப்பி வருகிறது. தமிழ் முதுகலை (எம்.) படிக்கவும் தமிழகத்திற்கு அனுப்புகிறது. இந்தப் பிரிவு தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் தொடர்பான பயிலரங்குகள், பகிர்வு அரங்குகள், கருத்தரங்குகள் ஆண்டுதொறும் நடத்தி வருகிறது. இப்போது தமிழ் மாணவர்களுக்கு எழுத்தாற்றல் போட்டியும் நடத்துகிறது

பல்கலைக்கழக நிலை

   சிங்கப்பூரில் நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகமும்,  தமிழ்க் கல்வி பயிற்றும் பணியில் உள்ளன.முன்னையதைச் சார்ந்த, தேசியக் கல்விக் கழகத்தில் தமிழ்ப் பிரிவுள்ளது. இப்பிரிவின் முதன்மைப் பணி ஆண்டுதொறும் தமிழாசிரியர்களை உருவாக்குவதும், பணியில் இருக்கிற தமிழாசிரியர்களின் மொழித்திறத்தையும் கற்பித்தல் முறைகளையும் மேம்படுத்துவதும் ஆகும். இங்கு ஈராண்டுப் பட்டப்படிப்பில் மாணவர்கள் பயில்கிறார்கள். ஆசிரியர் மூவர் இருக்கிறார்கள். இப்பிரிவு மொழி, இலக்கியம் கற்பித்தல் முறை ஆகியவற்றில் ஆய்வு நடத்துகின்றது. உயர்நிலை மாணவர் கட்டுரை எழுதுவதில் எதிர்நோக்கும் மொழியியல் இடர்ப்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஒருவர், கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். வகுப்பறை வினா- விடை தொடர்பாகவும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் முனைவர் (டாக்டர்) பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பள்ளி சார்ந்த பலவகை ஆய்வுகள் மேற்கொள்ளவும் இப்பிரிவு வழிவகுத்துள்ளது. மாணவர்களின் உச்சரிப்புத்திறன் மேம்படுத்த உதவும் செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் நூல் ஒன்றும் பயிற்று கருவித் தொகுப்பு ஒன்றும் தமிழ் வரிவடிவத்தைக் கற்பிக்கக் கையேடு ஒன்றும் வாசிப்புத் திறனைக் கற்பிக்கப் பல ஒளி நாடாக்களும் இப்பிரிவு உருவாக்கி வெளியிட்டுள்ளது. கற்பித்தல் தொடர்பாகப் பல கருத்தரங்குகளும் நடத்துகிறது. தமிழ்க் கணினிப் பயிற்சியும் இங்கு ஆசிரியர்களுக்குத் தரப்பெறுகிறது. இதுவரை பல தமிழாசிரியர்கள் இப்பயிற்சி பெற்றுள்ளனர். தமிழ்க் கணினியில் பயன்படுத்தப் புதிய விசைப்பலகை ஒன்று உருவாக்கியதுடன் அதனை எளிதில் கற்கவுதவும் தற்பயிற்சிச் சாதனம் ஒன்றையும் தயாரித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூரில் இவ்விசைப்பலகை பயன்பாட்டில் உள்ளது. பாடத்திட்டம், பயிற்றுகருவிகள் தேர்வு தொடர்பான பணியில் கல்வி அமைச்சிற்கு உறுதுணையாக இப்பிரிவு இருந்து வருகிறது. தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம், தொடர்பான நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. இப்பிரிவைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் அனைத்துலகக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கட்டுரைகள் படைத்து வருகின்றனர். தமிழ்க்கல்வி பற்றிய ஆய்வுத்திட்டங்கள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளனர்.

    சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 1999 முதல் தெற்கு ஆசிய இயல் பிரிவு, மொழிகள் படிப்ப நிலையம் ஆகியவற்றின் சார்பில் தமிழ் இயல், தமிழ்மொழிப்பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. தெற்கு ஆசிய இயல் பிரிவு தமிழியல்-1, தமிழியல்-2, என இரண்டு பாடங்களைப் பல்கலைக் கழகத்தில் அந்தந்தத் துறையில் படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் நடத்துகிறது.  A நிலையில் அதாவது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் தமிழ்த் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்பாடங்களை விருப்பப் பாடங்களாக எடுக்கலாம். தமிழியல் 1 பாடத்தில் மொழியியல், இலக்கிய, பண்பாட்டுக் கூறுகள் நோக்கில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத் திறனாய்வும் கவிதை நலம் பாராட்டலும் இப்பாடத்தில் உள்ளன. தமிழியல் 2 பாடத்தில் தமிழ் இலக்கியம்;, மொழிபெயர்ப்பு, தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு ஆகிய கூறுகள் உள்ளன. மொழிகள் படிப்பு நிலையத்தில் தமிழரல்லாத சீன,மலாய், இந்திய வெளிநாட்டு மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு சூழல்களில் பேசவும், ஓரளவு எழுதவும் பழகவும் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. இந்த இரு பாடங்களையும் பல்கலைக்கழகத்தில் பல்துறையில் படிக்கும் மாணவர்கள் விருப்பப்பாடமாக எடுத்துப் பயிலலாம். இதுவரை ஏறத்தாழ 300க்கு மேற்பட்ட தமிழரல்லாத மாணவர்கள் தமிழ் மொழி பயின்றுள்ளனர். தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. தமிழகத்திற்குச் சுற்றுப் பயணமும் மேற்கொள்ளுகின்றனர்.  

    மேலும்,  தமிழ் சார்ந்த  துறைகளில் தெற்கு ஆசியப் பாடப்பிரிவின் கீழ் முனைவர் பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளனசிங்கப்பூர் இலக்கியம் பற்றி ஒரு கருத்தரங்கும், அனைத்துலக அரங்கில் தமிழ் என்னும் தலைப்பில் இரு மாநாடுகளும் சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கு ஒன்றும் நடைபெற்றுள்ளன. யுனிசிம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி , இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்ட (BA ) வகுப்புப் பயில்வதற்கான வாய்ப்பு 2006 சனவரி முதல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுஇதற்காகச் சிங்கப்பூர்த் தமிழ்ச்சமுதாயமும், சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கமும் பெருமுயற்சி செய்துள்ளனஇதனால்  தமிழாசிரியர்களும், ஏனையோரும் தமிழ் மொழி இலக்கியத் தேர்ச்சி பெற்றுப் பட்டதாரிகளாக வாய்ப்புள்ளது. இது சிங்கப்பூர்த் தமிழ்க் கல்வியில் ஒரு சிறந்த சாதனை என்று கூறலாம்.

மக்கள் தொடர்புச் சாதனங்கள்

   சிங்கப்பூரில் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் 60 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பெற்ற தமிழ் முரசு நாளிதழ் வாரந்தொறும் மாணவர் முரசு, இளையர் முரசு என ஒரு பகுதியைத் தொடங்கிப் பல ஆண்டுகளாகத் தமிழ் மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்த்து வருகிறது. மேலும் தமிழ் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது என ஒன்றை வழங்கும் நிகழ்ச்சியை அண்மையில் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வருகின்றதுதேர்வுகளில் முதன்மைத் .தகுதி பெறும் மாவர்களைப் பேட்டி கண்டு ஊக்கம் ஊட்டுகின்றது சிங்கப்பூரில் 24 மணிநேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் 96.8 எனும் வானொலியும் தமிழ்மாணவர்களுக்குகேற்பப் பல நிகழ்ச்சிகைள ஒலிபரப்புகிறது. நாள்தொறும் 4-5 மணிநேரம் ஒளிபரப்பும் வசந்தம் செண்ட்ரல் தமிழ்த் தொலைக்காட்சிப் பகுதியும தமிழ்க்கல்வி வளரத் தேவையான பல நிகழ்சசிகளை மாணவர்களைக் கொண்டும் ஆசிரியர்களைக் கொண்டும் ஒளிபரப்பி வருகிறது. சமுக அமைப்புகள் துணையால் நடைபெறும் பேச்சுப் போட்டிகளை ஒலி , ஒளி பரப்பியும் மக்கள் சாதனப்பிரிவகள் உதவுகின்றன.

கணினி வழித் தமிழ்க்கல்வி

   தொடக்கப்பள்ளி நிலையிலேயே தமிழ் மாணவர்களுக்கு தமிழ்க்கணினியில் தட்டச்சுச் செய்யப் பயிற்சி தரப்படுகின்றது. மேலும் தமிழ்க்கல்வி எனும் தொடக்க நிலையில் தமிழ் பயிற்றும் பல் ஊடக மென்பொருள் வாயிலாகத் தொடக்கப்பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் பலவிதத்தமிழ் மென்பொருள்கள் தமிழ் பயிற்றத் துணையாகப் பயன்படுத்தப்பெறுகின்றனதமிழாசிரியர்கள் பலர் குழுக்களாக இணைந்து தொடக்கநிலை உயர்நிலை புகுமுக வகுப்பு நிலை ஆகியவற்றிற்குக்  தனித் தனிப்பாடங்கள் தயாரித்துக் கணினி இணைப்புக் கல்வி வாயிலாகத் தமிழ் பயிற்றி வருகின்றனர். மாணவர்களுக்குத் தமிழில் அகப்பக்கம் தயாரித்தல்மின்னஞ்சல் அனுப்புதல், குறுஞ்செய்தி அனுப்புதல் ஆகியவற்றிற்கும் பயிற்சி தரப்படுகிறதுஇணையத்தின் வழி தமிழ்ப்படைப்புகள் தயாரிக்கும் முயற்சியிலும் தமிழ் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பவர்பாயின்ட்()  மூலம் தமிழ்க் கருத்தரஙகுகளில் கட்டுரைகள் படைக்கும் திறனும் தமிழ் மாணவர்கள் பெறுகிறார்கள். இணைய இதழ்களைப் படிப்பதிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்உலகிலேயே சிங்கப்பூரில் தான் தமிழ்க்கல்வியில் கணினியும் இணையமும் அடங்கிய தகவல் தொழில் நுட்பம் அதிகமாகப் பயன்படுத்துப்பெறுகின்றது என்பது அறிஞர்கள் கணிப்பு . பல்கலைக்கழக நிலயிலும் தமிழ் கணினி, இணையத்தில் தமிழ் உலாவரச் சிங்கப்பூர்தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர். கணினிவழித் தமிழ் வளர்க்கச் சிங்கப்பூரில் பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்

   சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் தமிழ்க் கல்வி வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர் குரல் என்னும் இதழும் வெளியிடப்படுகிறது. அதில் தமிழ்க்கல்வி தொடர்பான கட்டுரைகள் பல இடம்பெறும்இது, 1992 இல் முதல் உலகத்தமிழாசிரியர் மாநாட்டினைத் தொடங்கி நடத்தியதுமற்ற நாடுகளில்- மலேசியா , இந்தியா , மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இம் மாநாடு நடத்தவும் ஏற்பாடு செய்ததுசிங்கப்பூரில் ஐந்தாம் மாநாடும் ஒன்பதாம் நடத்தியது, இவற்றில் கருத்துப்பரிமாற்றம் நடைபெற வழிவகுத்தது . மேலும் சிங்கப்பூர் மலேசியா தமிழாசிரியர்கள் தம் தமிழறிவையும திறனையும் மேம்படுத்திக் கொள்ளத் தமிழகத்தில் பல பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களை அழைத்துச் செல்கிறதுசிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் நல மேம்பாட்டுச் சங்கத்துடன் இணைந்து தமிழ்ப்பாடத் தனி வகுப்புகள் நடத்துகிறதுகருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியன நடத்தித் தமிழ்க் கல்வி மேம்பட வழிவகுக்கிறது.

தமிழ்க்கல்வி மறு ஆய்வுக் குழு

   தொடக்க நிலை முதல் வகுப்பிற்கு வருகிற மாணவர்களின் இல்லங்களில் தமிழ்ப் புழக்கம் 1980இல் 52.2 விழுக்காடு இருந்தது. 2000 த்தில் அது 42.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் 1980 இல் ஆங்கிலப்புழக்கம் 24.3 விழுக்காடாக இருந்தது. 2000த்தில் அது 35.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவ்வாறு ஆங்கிலப் புழக்கம் அதிகரித்துத் தமிழ்ப்புழக்கம் குறையும் நிலை வரவர மிகுதியாகிறது.இதனைக் கருத்தில் கொண்டும் ஏனையகல்வி வல்லுநர்களைக் கொண்டு தமிழ்க் கல்வி மறு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்துத் தமிழ்க் கல்வியின் எல்லாக் கூறுகளையும் மறு ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதுஅது விரைவில் பணிமுடிக்கும்.

முடிவுரை

    சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக விளங்கும் அதே வேளையில், அரசின் இருமொழிக் கொள்கையால் வலுப்பெற்றுப் பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழக நிலை வரையிலும் பயிற்றுவிக்கப்படுகிற ஒரு பாடமொழியாகவும் இருக்கிறது.

    இந்த நிலையினை இக்கட்டுரை ஓரளவு சுருக்கமாக எடுத்துக் காட்டியுள்ளதுதமிழ் மொழிக் கல்விக்கெனப் பயிற்றுக் கருவிகள் பலவற்றை உருவாக்கும் பணியிலும், கணினி வழித் தமிழ் கற்பிக்கும் பணியிலும் தமிழ்க் கல்வி உலகில் சிங்கப்பூர் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுத் திகழ்கிறதுமொழி கற்பித்தலில் பதிய புதிய முறைகளைக் கண்டறிவதிலும் சிங்கப்பூர் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

         

துணை நூல்கள்

திண்ணப்பன் .சுப. - சிங்கப்பூரில் தமிழ் மொழியும் இலக்கியமும், தேவகோட்டை, தேன் வள்ளியம்மை  பதிப்பகம் 1993

திண்ணப்பன். சுப. - சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி, வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் - நூலில், தமிழ் மாருதம் 1998. மதுரை.

முத்தையா.சி - சிங்கப்பூரில் தமிழ் . 2-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை .. 1994

முத்தையா.சி.- சிங்கப்பூர்ப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தலும், கற்பித்தலோடு தொடர்புடைய பிரச்சினைகளும் - சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை. . 2004.

* mailto:sasspt@nus.edu.sg