கவிதைகள்

உழைக்க வேண்டும் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

ஆக்கம் வேண்டு மெனில் - நன்மை

      அடைய வேண்டுமெனில்

ஊக்கம் வேண்டுமப்பா! - ஓயாது

      உழைக்க வேண்டுமப்பா!

உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்

      உடுக்கும் ஆடைக்கும்

மண்ணில் அந்நியரை - நம்பி

      வாழ்தல் வாழ்வாமோ?

நெற்றியின் வியர்வை - நிதமும்

      நிலத்தில் வீழ்ந்திடிலே

சற்றும் வாடாமல் - சுதந்திரம்

      தழைத்து வருமப்பா!

ஜாதிச் சண்டையெல்லாம் - ஓய்ந்து

      தணிய வேண்டுமப்பா!

நீதி நாடெங்கும் - நிலைத்து

      நிற்க வேண்டுமப்பா!

உலக மக்களெலாம் - அன்போடு

      ஒருதாய் மக்களைப்போல்

கலக மின்றிவாழும் - காலம்

      காண வேண்டுமப்பா!