இலக்கிய அரங்கம்

            பதிப்பு -1

     மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு - இலக்கியக்குரிசில் மா.இராமையா

    இக்கட்டுரையாளர் மலேசிய முன்னோடி எழுத்தாளர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மலேசிய எழுத்துத்துறையில் முதல் காலக்கட்ட (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகள்) எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் எனலாம். 1946-ஆம் ஆண்டு 'காதல் பரிசு' எனும் சிறுகதையைத் 'தமிழ் நேசன்' நாளிதழில் எழுதி இலக்கிய உலகில் கால் பதித்த இவர், இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 100க்கு மேற்பட்ட கட்டுரைகளும், 50க்கும் அதிகமான கவிதைகளும் 14 தொடர்கதைகளும் மூன்று குறுநாவல்களும் எழுதியுள்ள பெருமைக்குரியவர். தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி எனும் புனைப்பெயர்களிலும் அறிமுகமாகியுள்ள இவரது படைப்புகள் மலேசியாவில் வெளிவந்த, வருகின்ற அனைத்து இதழ்களிலும், தமிழகத்தில் சங்கொலி, கல்கி, மஞ்சரி, அமுதசுரபி, தாய் மற்றும் டில்லி தமிழர் சங்க மலர் போன்றவற்றிலும் புகழ் மகுடம் பெற்றுள்ளன. தமது சிறந்த படைப்புகளுக்குப் பல உயர் விருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 'சிறுகதை மன்னர்' எனச் சிறப்பிக்கப்பட்டுள்ள திரு.மா.இராமையா அவர்கள், மலேசியத் தமிழ் இலக்கியத்துறையில் வரலாறு படைத்தவர்; இலக்கிய வளர்ச்சிக்காக தம்மையே அர்ப்பணித்தவர் எனத் துணிந்து கூறலாம். நமது வேண்டுகோளுக்கிணங்க, உலகளாவிய தமிழ்ப் பெருமக்கள் மலேசிய இலக்கிய வளர்ச்சி குறித்து நன்கு அறிந்து கொள்ளவேண்டும் என்னும் நல்நோக்கில், இவர் இக்கட்டுரையினை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி.

  தமிழ் இலக்கிய வரலாறு : ஓர் அறிமுகம் (முனைவர் சி.சேதுராமன்)

    முனைவர் சி.சேதுராமன் புதுக்கோட்டை (தமிழ் நாடு) மா.மன்னர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு வலைத்தளப் பதிப்புகளில், குறிப்பாகத் தமிழின் முதல் இணைய வாரப் பத்திரிகையான 'திண்ணை' இதழில் பல இலக்கியக் கட்டுரைகளயும் பொது நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார், கலித்தொகையில் தொன்மக் கூறுகள், சூழலியல் கல்வி, தமிழிலக்கிய வரலாறு, தமிழ்ச் செம்மொழி வரலாறு, பாலினக் கல்வி ஆகிய ஆக்கங்களையும், மனசு, அழியாச் சுடர்கள் உள்ளிட்ட 10 சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார். மேலும், 'முத்துக்கமலம்' இணைய இதழில்  இவரது "பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்" எனும் கட்டுரைத் தொடரில் 40-ஆவது கட்டுரை இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. "புகழ்பெற்ற ஏழைகள்" என்னும் இவரது தொடர் கட்டுரை  எட்டாவது வாரமாக 'திண்ணை' இதழில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.  நமது வேண்டுகோளுக்கேற்ப இக்கட்டுரையினை விரைந்து அனுப்பி உதவியுள்ளார். அன்னாருக்கு நமது நன்றி.

  நாவல் திறனாய்வு : லா.ச.ரா.வின் 'அபிதா' - சுயத்தை உணர்த்தும் வெளிப்பாடு (முனைவர் மு.பழனியப்பன்)

   இலக்கியத் திறனாய்வாளர் முனைவர் மு.பழனியப்பன் சிவகங்கை (தமிழ்நாடு) மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தமிழாய்வுத்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவர் 'திண்ணை' மற்றும் பல இணைய இதழ்களிலும் நூற்றுக்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். இவரின் பதினோரு நூல்கள் இவரை இலக்கிய உலகில் நிலைபெறச் செய்வனவாக உள்ளன. நமது வேண்டுகோளுக்கிணங்க இந்த நாவல் திறனாய்வுக் கட்டுரையினை அனுப்பி உதவிய முனைவர் மு.பழனியப்பனுக்கு நமது நன்றி.