மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு

            

                  இலக்கியக்குரிசில் மா. இராமையா 

       இலக்கியம் என்பது ஒரு மொழியின் வரலாறு. ஒரு மொழியின் தொன்மையையும் வன்மையையும் வரலாற்றுப்பூர்வமாகப் பதிவு செய்ய உதவுவது இலக்கியம். தமிழ் இலக்கியம் மிகவும் பழமை வாய்ந்தது; செம்மையாக அமையப்பெற்ற செம்மொழியாகும்.

      தமிழ் இலக்கியம் பழமையான மொழி என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாகத் திகழ்கின்றன. தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அதேபோன்று தமிழ் எப்போது தோன்றியது என்று அறுதியிட முடியாத கால எல்லையைக் கொண்டது.

    ஆன்றோர்கள் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் முச்சங்கம் வைத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த மூன்று சங்கங்களே பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளைக் கடந்துவிட்டன. இதுவே தமிழ் இலக்கியத்தின் தொன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மலேசியத் தமிழ்

    மலேசியா தமிழ் பிறந்த மண்ணல்ல; வளர்ந்த மண். தமிழ் மன்னர்கள் இந்த மண்டலத்தை ஆட்சி செய்த காலத்தில் தமிழ் காலூன்றி வேர் பிடித்திருக்க வேண்டும். இந்த மண்டலத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற விரிந்த மனப்போக்கில் விட்டுக்கொடுத்துச் சென்றுள்ளனர்.  தமிழரின் வரலாற்றைச் சொல்லும் பூசாங் பள்ளத்தாக்கு இன்றும் வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி நின்றாலும், அதன் வரலாற்றுப் படிவங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

தமிழின் தலைப் பிள்ளை

    தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் கவிதைதான் தமிழின் தலைப்பிள்ளை. பண்டைய இலக்கியங்கள் அனைத்தும் கவிதை வடிவில் அமையப்பெற்றிருப்பது ஒரு சான்று.

   இந்நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த தமிழர்கள் பல இலக்கியப் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் முதன்மையானது கவிதை வழி அமையப்பெற்ற வண்ண அந்தாதி, வண்ணநகர் ஊஞ்சல், தண்ணீர் மலை வேலன் நவரத்தின மாலை, சிங்கை முருகன் மேல் பதிகம் என்று அதிகமான பக்திப் பாமாலைகள் வெளிவந்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து கவிதைகளும் வெளிவந்துள்ளன.

உரைநடை

   உரைநடை தமிழுக்கு உரியதல்ல.  ஐரோப்பாவில் முளைவிட்ட இந்த உரைநடை, இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்து, தமிழ் நாட்டுக்குள் அடியெடுத்து வைத்த பிறகே உரைநடை இலக்கியங்கள் முகிழ்த்தெழுந்தன. தமிழகத்தில் உரைநடை இலக்கியம் வேர் பிடித்து ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரே இங்கே முளைவிடத் தொடங்கியது. இந்த நல்ல பணியைத் தொடக்கி வைத்தவர்கள் இங்கே வணிகம் செய்ய வந்த கற்றோரும் பற்றாளருமாவர். இவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்றவர்கள். மலேசியாவில் தமிழ் கற்கும் வாய்ப்பு ஒரு நூற்றாண்டுக்குட்பட்டது என்று சொல்லலாம்.

 தமிழர்கள் இந்நாட்டிற்குச் சஞ்சிக் கூலிகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று.    இந்நாட்டைச் சீர்படுத்தி வளங்கொழிக்கும் மண்ணாக மாற்றுவதற்கு ஆங்கிலப் பேரரசு தமிழர்களை இங்கே கொண்டு வந்தது. இங்கே கொண்டுவரப்பட்ட தமிழர்கள் கல்வி அறிவு பெறாதவர்கள். தாங்கள்தான் தற்குறிகளாக இருந்துவிட்டோம். நம் பிள்ளைகளாவது கல்வி கற்றவர்களாக விளங்க, பள்ளிக்கூடங்கள் கட்டித்தரப் போராடினார்கள்.

 மலேசியாவில் முதல் தமிழ்ப் பள்ளிக்கூடம் 1821-ஆம் ஆண்டு பினாங்கில் தொடங்கப்பட்டாலும் நாடு முழுவதும் உள்ள தோட்டங்கள்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இங்கே கட்டிக் கொடுக்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் இலங்கைத் தமிழரும் தமிழகத் தமிழரும் ஆவர். தமிழ் நாட்டுச் சூழலில் எழுதப்பெற்ற தமிழ்ப் பாடநூல்களே இங்கே பயன்படுத்தப்பட்டன.

புத்தெழுச்சி

 இரண்டாவது உலகப் போர் 1945-இல் முற்றுப்பெற்ற  பின்னர் தமிழ் கற்கும் ஆர்வம் முன்னைவிட அதிகமாக எழுச்சிப் பெற்றிருந்தது. ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாணவ ஆசிரியர்களாகப் பள்ளிகளில் அமர்த்தப்பட்டனர். தோட்டப்புறங்களிலும் நகரங்களிலும் சேர்த்து ஆயிரத்து இருநூறு பள்ளிகள் உருவாகி இருந்தன.

தமிழ்ப்பள்ளிகளில் படித்தவர்களுக்குத் தமிழாசிரியர் வேலை மட்டுந்தான் கிடைத்தது.  பள்ளிகளின் எண்ணிக்கை கூடியிருந்ததால் ஆசிரியர்களும் தேவைப்பட்டனர்.  கல்வித் தரமும் படிப்படியாக உயர்த்தப்பட்டது. ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பிற்கு உயர்ந்து ஏழாம் வகுப்பில் வந்து நின்றது. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டதோடு, வட்டார ரீதியாக ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

ஏழாம் வகுப்புவரை படித்த ஆசிரியர்களிடம் நல்ல தமிழ்ப் புலமையும் எழுத்தாற்றலும்  இருந்தது. படிக்கும் ஆர்வமும் மிகுந்திருந்தது. 'கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு' என்பதை உணர்ந்த தமிழாசிரியர்கள் தன்முயற்சியாகப் பல இலக்கிய நூல்களைப் படித்து அறிவாற்றலைப் பெருக்கிக் கொண்டார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் இந்நாட்டுத் தமிழர்கள் வாசிப்பதற்குத் தமிழ் நாட்டு ஏடுகளையும் நூல்களையுமே நம்பி இருந்தனர். உள்ளூர் தாளிகைகளும் தமிழக ஏடுகளில் வெளிவந்த படைப்புகளை மறுபதிப்பு செய்தன. குறிப்பாகத் 'தமிழ் முரசு' குத்தூசி குருசாமியின் சிறுகதைகளை மறு பதிப்பு செய்து கொண்டு வந்தது.

அக்கரையை நம்பிக் கொண்டிருப்பதைவிட இங்கேயும் எழுத்தாளர்களை உருவாக்கினால் என்ன என்ற புதிய சிந்தனையின் வெளிப்பாடுதான் 1950-ஆம் ஆண்டு அறிஞர் சுப.நாராயணனும் (கந்தசாமி வாத்தியார்) பைரோசி நாராயணனும் (வானம்பாடி) தமிழ் நேசனில் தொடங்கிய கதை வகுப்பு. வாரந்தோறும் நடத்தப்பட்ட இந்தக் கதை வகுப்பில் நாடுதழுவிய  அளவில் அதிகமானவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்களில் அதிகமானவர்கள் தமிழாசிரியர்கள். இவர்கள் சளைக்காமல் பங்குபற்றித் தங்கள் தமிழ்த் தாக்கத்தை வெளிப்படுத்தினர். இந்தக் கதைவகுப்பில் ஏறத்தாழ எண்பது பேர் வாரந்தோறும் பங்குகொண்டனர்.

சிறுகதைப் போட்டி

தமிழ் நேசனில் கதைவகுப்பு தொடங்கிய பின்னர் 'தமிழ் முரசு' வாரந்தோறும் சிறுகதைப் போட்டியை நடத்தி 45 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் சிறுகதைகளை ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு எழுத்தாளர்களுக்கு ஊக்கமூட்டியது.

தமிழ் முரசு சிறுகதைப் போட்டியை மட்டும் நடத்தவில்லை; கவிஞர்களை உருவாக்க கவிதைப் போட்டியையும் நடத்தியது. ஆனால், சிறுகதைப் போட்டிக்குக் கொடுத்த முக்கியத்துவம் கவிதைக்குக் கொடுக்கவில்லை.

பினாங்கில் சுவாமி இராமதாசர் தலைமையில் இயங்கி வந்த கலாநிலையம் எழுத்தாளர்களுக்குக்  கவிதை வகுப்பை நடத்தியது. அந்த வகுப்பில் பங்குகொண்டவர்கள் பலர் தரமான கவிஞர்களாக உருவாகி இருந்தனர்.

எழுத்தாளர் பேரவை

எழுத்தாளர்களை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு 'எழுத்தாளர் பேரவை' எனும் பகுதியைத் தமிழ் முரசு தொடங்கியது.  இந்தப் பேரவையில் பதிந்துகொண்டவர்கள் கொடுக்கப்படும் தலைப்புகளில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுத வேண்டும்.

இந்நாட்டில் எழுத்தாளர்கள் தத்தித் தவழ்ந்து கொண்டிருக்கும் வேனையில் எழுத்தாளர்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்தது.  பேரவை எழுத்தாளர்கள் புதிய திருமண விதிமுறைகளை வகுக்கும்படி பணித்தது. அது தோல்வியில் முடிந்தது.

மாணவர் மணிமன்றம்

எழுத்தாளர்கள்பால் கவனம் செலுத்திக் கொண்டிருந்த 'தமிழ் முரசு' மாணவர்களுக்கென மாணவர் மணி மன்றத்தைத் தொடங்கியது. மாணவர்களையும் எழுதத்தூண்டும்  வகையில் 'மாணவர் மணி மன்ற மலர்' என்னும் ஓர் இணைப்பை 6.7.1953-இல் தமிழ் முரசுடன் இணைத்து வெளியிட்டு வந்தது. அதில் மாணவர்கள் மட்டும் எழுதவில்லை. மாணவர்களுக்காக எழுத்தாளர்களும் கவிஞர்களும் கவிதைகள், கட்டுரைகள், மாணவர்களுக்கான தொடர் கதைகளை எழுதினர்.

மாணவர் மணி மன்ற மலரில் பாவலர்கள் சோமசன்மா, முரசு.நெடுமாறன், கவி மதிதாசன், சி.வேலுசுவாமி, வளர்மதி முதலானோர் குழந்தைகளுக்காக மணிமணியான பாடல்களை எழுதிக் குவித்தனர்.  இவர்கள் அனைவரும் முதல் காலக்கட்ட கவிஞர்களாவர்.

மாணவர் மணிமன்ற மலரில் எழுதி எழுத்துத் திறனை வளர்த்துக் கொண்டவர்களும் எழுத்தாளர்களாக உருவானவர்களும் உண்டு. இவர்கள் இரண்டாங்கட்ட எழுத்தாளர்களாவர். மாணவர் மணி மன்ற மலர் மூலம் எழுத்துலகில் அடியெடுத்து வைத்து பிரபலமானவர்கள் பலர். ம.முருகையன் (முல்லை), சு.தமிழ் வாணன் (சு.அப்துல் முத்தலிப்), கு.கிருட்ணன், நீ.பங்கசாட்சி, மு.சீனிவாசன், மைதி.அசன் கனி. மைதி.சுல்தான், சு.வைத்திலிங்கம், தங்கா தமிழ்ப் பாணன் (பழ.அடைக்கலம்), நீ.பெ.கலைச்செல்வன், ரெ.கார்த்திகேசு, செ.சின்னையா (இளவேந்தன்), அ.சந்திரசேகரன், சா.ஆ.சுப்பிரமணியம் (சா.ஆ.அன்பானந்தன்), ப.மு.அன்வர், வே.சு.இளந்திரையன், மு.பக்ருதீன், அ.ரெசுவப்பா, வீ.தீனரட்சகி, ப.கு.சண்முகம் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.  இவர்கள் இரண்டாங்கட்ட எழுத்தாளர்கள் ஆவர்.

இளைஞர் மணிமன்றம்

இந்த மாணவர் மணிமன்றந்தான் பின்னர் தமிழ் இளைஞர் மணிமன்றமாக உருமாறி பேரியக்கமாகத் திகழ்ந்தது. இந்தப் பேரியக்கத்தின் முதல் தேசியத் தலைவர் கலைமாமணி சா.ஆ.அன்பானந்தன். இந்த இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளைத்து மொழி, கலை, இலக்கியம் வளர ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் திகழ்ந்தது. இது பின்னர் மணிமன்றப் பேரவையாக விரிவடைந்தது.

தமிழர் திருநாள்

தமிழர்கள் அறிவில், ஆற்றலில், பண்பில், பண்பாட்டில் சிறந்தவர்கள் என்பதும் உலக மக்களுக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் என்பதும் வரலாற்று உண்மைகள். அவர்களிடம் எல்லாத் திறனும் பலமும் இருந்தும் ஒன்று மட்டும் இல்லையென்பது வெள்ளிடைமலை. அதுதான் ஒற்றுமை. அதுமட்டும் இருந்தால் நாம் யாருக்கும் அடிமையாக வாழவேண்டியதில்லை; யாரும் நம்மை அடிமைப்படுத்தவும் முடியாது.

தமிழர்களை ஒன்றுபடுத்த என்ன வழி ன்பதை ஆராய்ந்தறிந்த சிங்கப்பூர் பிரதிநிதித்துவ சபை தமிழர் திருநாள் வழி ஒற்றுமைப்படுத்த முடியும் என்று தமிழர் திருநாள் விழாவை தமிழரின் ஆண்டுப் பிறப்பான சுறவம் திங்கள் முதல் நாளே (தை முதல் நாள்) கொண்டாடுவதென முடிவெடுத்து 1952-ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் பெர்லிசு, ஆராவிலும் கொண்டாடப்பட்டது. மறு ஆண்டு தொடக்கம் பரவலாகப் பல ஊர்களிலும் கொண்டாடத் தொடங்கினார்கள்.  இந்த விழாவில் இலக்கிய உரை நிகழ்த்த தமிழவேள் கோ. சாரங்கபாணி  தமிழகத்திலிருந்து பேராசிரியர்களை வரவழைத்து, ஊர்ஊராகத் தம் சொந்தச் செலவில் அழைத்துச் சென்று சொற்பெருக்காற்ற வைத்தார்.

தமிழர் திருநாள் விழாவில் மொழி இன வேறுபாடின்றி தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் விழாவில் பங்கேற்று ஒற்றுமையைப் புலப்படுத்தினார்கள். தமிழர் திருநாள் விழா ஒற்றுமைக்கு வித்தூன்றியதுடன், தமிழ் மொழியின் எழுச்சி விழாவாகவும் திகந்தது. விழாக்குழுவிணர் எழுத்தாளர்களுக்கு சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளையும், சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர். சில ஊர்களில் தமிழர் திருநாள் விழாக்குழு இவலக்கியப் படைப்புகளைத் திரட்டி மலர்களும் வெளியிட்டிருக்கின்றன. தமிழர்கள் மொழியைக் காப்பதுபோல் கலையையும் காத்து வந்தனர். தமிழர் திருநாள் விழாவில் மேடை நாடகம் ஓர் அங்கமாக இடம்பெற்றது.

தமிழ் எங்கள் உயிர்

சிங்கப்பூரில் இயங்கி வந்த மலாயாப் பல்கலைக்கழகம் 1959-ஆம் ஆண்டு கோலாலம்பூருக்கு இடம்மாற்றிக் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொரு மொழிக்கும் ஆய்வுத்துறை அமைக்கப்பட்டது.  தமிழ் மொழிக்கென அமைக்கப்பட்ட இந்திய ஆய்வியல் துறைக்கு எந்த மொழியைப் பயிற்று  மொழியாகக் கொள்வதென்ற சிக்கல் எழுந்தபோது, அதனைத் தீர்த்து வைக்க இந்திய நடுவணரசு நீலகண்ட சாத்திரியை அனுப்பி வைத்தது. இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் தொண்ணூற்றைந்து விழுக்காட்டினர் தமிழர்கள். இங்கே ஆயிரத்து இருநூறு தமிப்பள்ளிகள் தோட்டங்களிலும் பட்டணங்களிலுமாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, இந்திய ஆய்வியல் துறைக்கு சமற்கிருதத்தைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று நீலகண்ட சாத்திரி பரிந்துரை செய்தது தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களைக் கொதித்தெழச் செய்தது. 'தமிழ் முரசு' நாளிதழில் கண்டனக்குரல் எழுப்பி தமிழர்களை வீறுகொண்டு எழச் செய்தார்.

தமிழர்களின் எழுச்சியையும் ஆவேசத்தையும் கண்டு பின்வாங்கிவிட்டார் நீலகண்ட சாத்திரி. மலாயாப் பல்கலைக்கழகத்து இந்திய ஆய்வியல் துறைக்குத் தமிழ்தான் பயிற்றுமொழி என்பது உறுதியாகி, தமிழ் அரியணை ஏறியது. 'தமிழ் முரசு' வழி தமிழர்கள் கிளர்ந்தெழவில்லை யென்றால் சமற்கிருதம் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்தான் பயிற்றுமொழி என்பது உறுதியானபின், வேறொரு சிக்கல் தலைதூக்கியது.  மலாயாப் பல்கலைக்கழக ஆய்வியல்துறை நூலகத்துக்கு நூல்கள் தேவைப்பட்டன. நீலகண்ட சாத்திரியின் பரிந்துரைப்படி சமற்கிருதத்தைப் பயிற்றுமொழியாக ஏற்றுக் கொண்டிருந்தால் இந்திய நடுவணரசு கப்பல் கப்பலாக சமற்கிருத நூல்களை அனுப்பி வைத்திருக்கும். தமிழ்தான் பயிற்றுமொழி என்று போராடிப் பெற்றதால் நூலகத்துக்குத் தமிழ் நூல்களை வழங்க வேண்டியது நமது கடமையாக இருந்தது.

தமிழவேள் கோ. சாரங்கபாணி மலேசியத் தமிழர்களிடம் நிதி கேட்டார். பத்து, ஐம்பது, நூறு வெள்ளி வீதம் கொடுங்கள் என்று கேட்கவில்லை. ஆளுக்கு ஒரு வெள்ளி கொடுங்கள் என்று கேட்டார். அவ்வளவுதான். தமிழர்கள் ஆளுக்கு ஒரு வெள்ளி கொடுத்து கோ. சா. எதிர்பார்த்த ஓர் இலக்கம் வெள்ளிக்கு மேல் சேர்ந்துவிட்டது. இந்த நிதிக்கு அவர் இட்ட பெயர் 'தமிழ் எங்கள் உயிர்' நிதி என்பதாகும். புரட்சிக்கவி பாரதிதாசன்,

           தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்

          தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று பாடி வைத்திருப்பதை மலேசியத் தமிழர்கள் உயிர்ப்பித்துக் காட்டிவிட்டார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள்போல், அன்று தமிழவேள் கோ. சாரங்கபாணி மவுனமாக இருந்திருந்தால்,   மலாயாப்   பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் சமற்கிருதம் அரியணை ஏறி, நாட்டிலுள்ள ஆயிரத்து இருநூறு தமிழ்ப் பள்ளிகளும் சமற்கிருத பள்ளிகளாக மாறியிருக்கும்! 

மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் பயிலச் சென்ற மாணவர்கள் தமிழ்ப் பேரவையை உருவாக்கி அதன் வழி சமூகச் சேவையையும் நீண்ட விடுமுறை நாள்களில் (semester break) தோட்டப்புறங்களுக்குச் சென்று மாணவர்களுக்குக் கல்வி போதனையையும் நடத்தி வந்தனர். அதோடு நின்றுவிடாது இலக்கியத் துறையிலும் ஆர்வம் காட்டினர்.

மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1982-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோராண்டும் சிறுகதைப் போட்டியை நடத்தி, நன்கொடையாளர்களிடம் தொகையைத் திரட்டி, கணிசமான அளவில் பரிசாக வழங்கி வருகிறது. சிறுகதைப் போட்டியில் தேர்வுபெறும் முதல் மூன்று கதைகளுடன் ஆறுதல் பரிசு பெறும் ஒன்பது கதைகளையும் தொகுத்து  நூலாக வெளியிட்டுக் கொண்டு வருகிறது. தமிழ்ப் பேரவை இதுவரை இருபத்தைந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்

இக்கூட்டுறவு சங்கம், சுதந்திர சாசனத்தில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவரான துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  இந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு  ஆங்கிலேயர் வசமிருந்த தோட்டங்கள் தனியாருக்கும் நிறுவனங்களுக்கும் கைமாறின. தோட்டங்களை வாங்கிய தனி நபர்கள் தோட்டங்களைபத் துண்டு போட்டு விற்கத் தொடங்கினர்.

தோட்டங்களையே காலங்காலமாக நம்பியிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். போக்கிடம் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு உதவிட இந்தத் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை நிறுவி, விற்பனைக்கு வந்த தோட்டங்களில் சிலவற்றை வாங்கித் தமிழர்களுக்கு மறுவாழ்வு தந்தார் துன் சம்பந்தன். மலேசியாவிலேயே பெரிய நில நிதி கூட்டுறவு சங்கம் இதுதான்.

துன் வீ.தி.சம்பந்தன் அவர்களுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற தான் சிறீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்கள் பல வழிகளிலும் இதனை முன்னேற்றமடையச் செய்தார். கூட்டுறவு சங்கத்தில் உறுப்பியம் பெற்ற உறுப்பினர்களுக்கு மருத்துவம் மற்றும் பல உதவிகளைச் செய்யத் தொடங்கினார்.

தான் சிறீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்களின் பார்வை இலக்கியப் பக்கம் திரும்பியது. எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டி நடத்தி கணிசமான தொகையைப் பரிசாக வழங்கி வருகிறார். எழுத்தாளர்களுக்கெனத் தொடங்கிய இந்தப் போட்டி மாணவர்களும் பங்குபெறும் அளவிற்கு விரிவடைந்து, இப்போது சிறுகதைக்கு மட்டுமன்றி கவிதை, கட்டுரை, உரைவீச்சு போன்ற இலக்கிய வடிவங்களுக்கும் போட்டி வைத்துப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

சிறுகதை படைப்பாளர்கள்

இந்நாட்டின் தொடக்க காலம் முதல் இன்றுவரை சிறுகதை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. மற்றத்துறை படைப்பாளர்களைவிடச் சிறுகதை படைப்பாளர்கள்தாம் மிகுந்து காணப்படுகின்றனர். எழுத்தாளர்களும் கட்டங்கட்டமாக வளர்ச்சியடைந்து வருகின்றனர். கந்தசாமி வாத்தியாரின் (சுப.நாராயணன்) கதைவகுப்புக் காலத்தை (1946 - 1956) முதல் காலக்கட்டம் என்று குறிப்பிடலாம். பி.ஏ.கிருட்ணதாசன், அ.இராமநாதன், சி.மாரியப்பன், பெ.மு.இளம்வழுதி, கா.பெருமாள், க.பெருமாள், லாபு; சி.வடிவேலு, சி.வேலுசுவாமி, கா.அ.கா.அகமது ஜலாலுதீன், அ.கி.அறிவானந்தன், மு.அப்துல் மஜீது, மு.பரமசிவன், மா.இராமையா, கு.நா.மீனாட்சி, மு.தனபாக்கியம், ம.சு.அண்ணாமலை (சோமசன்மா), சி.அன்பரசன், மு.அன்புச்செல்வன், செ.சின்னையா (இளவேந்தன்), மு.சந்திரன் (மதுராந்தகன்), சி.காவேரிநாதன், அ.சண்முகம், ஐ.இளவழகு, சீ.அருணாசலம், இர.ந.வீரப்பன் முதலானோர் இக்காலக்கட்ட எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களைத் தவிர்த்து இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் என்று கீழ்க்கண்டவர்களைக் குறிப்பிடலாம்:  ஏ.தேவராசன், சுகூடாய் சி.வடிவேலு, கீ.சீலதாசன், டாக்டர் ஜி.ஜான்சன், கல்யாணி மணியம், பாவை, தா.ஆரியமாலா, நிர்மலா பெருமாள், கா.பாக்கியம்.

அடுத்தப் பதிப்பில்  தொடரும்........