அன்றாட வாழ்வில் அறிவியல்

மாதங்கி*

சமைக்கப்பட்டவுடன் அல்லது சூடாக இருக்கும் நிலையில், உணவு, வாசனையாக இருக்கும் காரணம் என்ன?

எளிதில் ஆவியாகக் கூடிய பொருள்கள் உணவில் இருப்பதே, வாசனைக்கு முக்கிய காரணம். எடுத்துக்காட்டாக, சமைக்கப்பட்ட மாமிசத்தாலான உணவில் இருக்கக்கூடிய லாக்டோன்கள் (lactones), சல்பர்  (sulphur) (சல்ஃபைடுகளையும் (sulphides) சேர்த்துத்தான்ஆகிய கூட்டுப்பொருள்கள், மெர்காப்ட்டன்ஸ் (mercaptans)  மற்றும் சைக்ளிக் (cyclic)  கூட்டுப்பொருள்கள் எனப்படும் பைரஸீன் (pyrazine) ஆகியவையே மணத்திற்கான முக்கியப்  பங்கை வகிக்கின்றனசமைக்கப்பட்ட கோழியில், கோழிக்குண்டான வாசனை வீசுவதற்கு அதிலிருக்கும் ஆவியாகக்கூடிய கார்பனைல்கள்தான் (carbonyls) காரணம். உணவு சூடாக இருக்கும்போது அல்லது சுடவைக்கப்படும்போது, ஆவியாகக்கூடிய பொருள்கள் சூட்டின் காரணமாக வெளியேறுவதால் வாசனை ஏற்படுகிறது.

உணவை சுட வைக்கவேண்டும்,  சூடாக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோம்.

குழைச்சூடு, கொழுஞ்சூடு, நெடுஞ்சூடு, வான்சூடு போன்ற சொற்களை சூட்டின் தன்மையைக் குறிக்க சங்க காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும், ஊன் உணவு பதப்படுத்தப்பட்ட நிலைகளைக் குறிக்க, புழுக்கு, பொறியல், வறை, வாட்டு, வேலை போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன

காழிற் சுட்ட கோமூன் கொழுங்குறை என்று பொருநராற்றுப்படையில் (105-ஆம் வரி) இறைச்சியை இரும்பு நாசரத்தில் கோர்த்துச் சுட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு மனிதரால் 10,000 விதமான வாசனைகளை வேறுபடுத்தி அடையாளம் காட்ட முடியுமாம். அறிவியல் சொல்கிறது. சரி,  மனிதரின் செல்லப்பிராணியாக இருக்கும் நாய்களுக்கு? எத்தனை வகைகளை வேறுபடுத்தி அறிய முடியுமாம்?  விடை : 100,000 = 1,000,000   வகைகள்.

 சரி, எந்த நாய் 1,000,000 வகைளை அறியும்வேறு எது, வேட்டை நாய்தான்!

 

 நாம் வசிக்கும் பூமி, வளர்ச்சியடைந்துகொண்டே வருகிறதா (அளவில்) ?

 தற்போது பூமியின் அளவைகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. நிலச்சரிவுகள், பூகம்பங்கள்  போன்றவை சிறு மாற்றங்களை ஏற்படுத்தும்; அதுவும் பூமியின் வடிவத்தில்தான். பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகள் குறுகி, குன்றுகள், மலைகள் என்று ஏற்பட்டால், சிறு மாற்றங்கள் இருக்கும்.   ஆனால் பூமி என்ற கோளத்தின் அளவுகளை வைத்து ஒப்பிடும்போது மாற்றப்பட்ட அளவுகள் மிக மிகக் குறைவாகவே இருக்கும், ஆனாலும் பூமியின் மொத்த நிறையில் மாற்றம் ஏற்படாது.

நமது சூரியக் குடும்பம் உருவாகக் காரணமாக இருந்த விண்மீன்களுக்கிடையேயான தூசு முதலியவை முக்கியப் பங்காற்றிய காலத்தை நினைத்துப் பார்ப்போம். அந்தக் காலத்தில்,  அதாவது பூமி என்ற கோளம் வளர்ச்சியடைந்துகொண்டிருந்த காலத்தில், பூமியின் அளவுகளில் மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகமாக ஆகிவந்தது. வளரும் பருவத்தில் (!) பூமியானது விண்ணகக் குப்பைக் கூளங்களை ஈர்ப்பு மூலம் இழுத்து வந்தது; வளர்ந்தது. இப்போது, பூமியைச் சுற்றியுள்ள வெளி, வெற்றிடமாக உள்ளது. அதனால் அதனுடைய அளவுகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

கண்டங்கள், பெருங்கடல்கள் போன்ற அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் பூமியின் பரப்பளவு 500 மில்லியன் கிலோ மீட்டர்கள். சுற்றளவு 40,000 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆண்டு ஒன்றிற்கு ஏறத்தாழ 30,000 (எண்ணிக்கையில்) விண்ணகத் தூசுகள் பூமியில் நுழைகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை, நுழையும்போதே எரிந்துவிடுகின்றன.

   

*madhunaga@yahoo.com.sg