கவிஞர் மீராவின் கவிதைகள்

 

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

                  முடிவுரை

               என் வேட்கையே!

நீ இவ்வளவு தாமதமாக வந்து இவ்வளவு

     விரைவாகப் புறப்பட்டு விட்டாயே!

நீ வந்தபோது இனிமேல்தான்     என்

வாழ்க்கை தொடங்கப் போகிறது என்று

              எண்ணினேன்.

    'போய் வருகிறேன்' என்று நீ உன்

வாயினாலேயே சொன்னதும் நான் என்றோ

            இறந்துவிட்டதாக எண்ணினேன்.

நீ வந்தபோது என் வாழ்வுக்கு முன்னுரை

எழுத வந்திருக்கிறாய் என்று கருதினேன்;

    நீயோ முடிவுரை எழுத வந்திருக்கிறாய்.

நீ பறக்கப் பார்க்கிறாய்; நான் கூண்டுக்குள்

         அடைபட்டு நிற்கிறேன்.

என் வேதனை உன் விழிகளை நனைக்கிறது.

அந்தப் பழைய படகின் பக்கம் நின்று

கொண்டு இதழ்கள் நடுநடுங்க "நீங்கள்

        நன்றாக இருக்க வேண்டும்"

            என்று வாழ்த்துகிறாய்.

            இது என்ன பேதைமை?

           நான் இருந்தால் அல்லவா

            நன்றாக இருக்க முடியும்?

நீ இல்லாமல் நான் எப்படி இருக்க முடியும்?

இராமன் இல்லாத தேர், சுமந்திரன்  கண்

ணுக்குச் சூனியமாகத் தெரிந்தைப் போல்

இந்த உலகம் இனி எனக்குச் சூனியமே.

பாரி இல்லாத பறம்பு, கபிலன் பார்வைக்குப்

         பாழாய் விரிந்ததைப் போல்

       எல்லாம் இனி எனக்குப் பாழே.

வந்த நோக்கம் நிறைவேறாமல் நான் புறப்

பட்ட இடத்திற்குத் திரும்பப் போகிறேன்.

பஞ்ச பூதங்களும் என்னைப் பாசத்தோடு

             எதிர்பார்க்கின்றன.

        வெளி என்னை விளிக்கிறது.

  அந்திக் காற்று என்னை அழைக்கிறது.

  என் இடது கால் முன்னே நிற்கிறது.

               போகுமுன் -

    என் கையால் ஏதேனும் உனக்குத்

தராவிட்டால் என் இதயம அமைதி

             அடையாது.

         நீ எனக்குக் காதலைத் தந்தாய்;

அது உழைப்பாளியின் வியர்வையைப் போல்

               உயர்வானது;

நான் உனக்கு இந்த வசன காவியத்தைத்

தருகிறேன்; இது, ஏழையின் கண்ணீரைப்

    போல் உண்மையானதா என்று பார்.

இதை நீ பார்க்கவில்லையென்றால்  எனக்கு

            நிம்மதி இருக்காது.

உன்னைச் சந்தித்தது முதல் பாலைப் பாடல்

என் செவிப்பறையைத் தாக்கும்  இந்த

வினாடி வரை, நான் உன்னோடு உனக்குத்

தெரிந்தும் தெரியாமலும் அனுபவித்த

தவிப்புக்களையும் தாபங்களையும் இதில்

         இறக்கி வைத்துள்ளேன்.

               என் சத்தியமே!

எனக்கு ஓவியம் எழுதத் தெரியாது.  தெரிந்

திருந்தால் உன்னையும் உன்னைச் சுற்றி

வட்டமிட்ட என் உள்ளுணர்வுகளையும்

     வண்ணங்களில் வழங்கியிருப்பேன்.

அதற்காக எந்த ஓவியனின் கையையும்

        நம்பியிருக்க விரும்பவில்லை;

          நீயும் விரும்ப மாட்டாய்.

    உன் மனம் எனக்குப் புரியுமே.

    என் மனமும் உனக்குப் புரியுமே.

என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால்

    வேறு யார் புரிந்து கொள்ளக்கூடும்?

என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால்

    வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன?

               என் அந்தரங்கமே!

        இதோ, என் சொல்லோவியம்...

        நம் உள்ளப் புணர்ச்சிக்குப் பிறந்த

   உயிரோவியம்..... உன் காலடியில் வைக்கிறேன்.

          விசுவாமித்திரனைப் போல்

  வேண்டாம் என்று சொல்லிவிடாதே.

ஆராதனை

சாவ தெனில்நான் சாவேன் உன்றன்

     சந்நி தானத்தில் - அங்கே

போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்

     பூவி மானத்தில்

ஆரா தனையில் ஆருயிர் வாசனை

     அழகுகள் சொரிந்தேனே - தினமும்

பாரா யணமாய் உன் திருப் பெயரைப்

     பாடித் திரிந்தேனே!

வேகம் குறைய வில்லை; மேலும்

     வேதனை கூட்டாதே - என்றன்

பாகம் பிரியா நாயகி யேஉன்

     பக்தனை வாட்டாதே!

முன்போர் சமயம் தீண்டி யவன்என

     முகத்தை வெறுக்காதே - பொங்கும்

அன்போர் சமயமும் அடங்கா(து); உனைச்சரன்

     அடைந்தேன் மறுக்காதே

தேவி, உனதருள் தேடிவந் தேன்;  உயிர்த்

     தீர்த்தம் கொடுப்பாயே - இல்லை

'பாவிஇவன்' எனப் பட்டால் எனை நீ

     பலியாய் எடுப்பாயே!

சாவ தெனில் நான் சாவேன் உன்றன்

     சந்நி தானத்தில் - அங்கே

போவதெனில்நான் போவேன் கண்ணீர்ப்

     பூவி மானத்தில்!