நீதிக் கதைகள்

 

வெற்றி நிச்சயம்*

வகுப்பாசிரியர் குறிப்பிட்ட பாடத்தை நன்கு நடத்தி முடித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து, "ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்றார்.

யாரும் எதையும் கேட்கவில்லை. வகுப்பு முடிய இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அடுத்த பாடத்தை நடத்தாமல் அந்தப் பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கும்படி வலியுறுத்தினார். அதுதான் அவருக்கே உரித்தான  வழக்கமும்கூட. எப்போதுமே ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை மட்டுமே நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். 

அந்த வகுப்பில் படிக்கும் மாணவன் சேகருக்கு இது பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே பாடத்தை நடத்துவதை வெறுத்தான். ஒரு நாள் அதை நேரடியாக அவரிடமே கேட்டும்விட்டான். "ஒரே பாடத்தைத்  திரும்பத் திரும்ப நடத்துவதால் அது எளிதாக மனத்தில் பதியும் என்பது உண்மைதான் சார். ஆனால் வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு உதாரணங்களுடன் நீங்கள் நடத்தும்போது அது மனதிற்கு இதமாகவும் இருக்கும் அல்லவா? அதோடு அடுத்த பாடத்தை நடத்தாமல் நேரத்தை வீணாக்கலாமா சார்? " என்றான்.

ஆசிரியர் சிறுது நேரம் அவனை அமைதியாகக்  கூர்ந்து பார்த்தார். பிறகு, "நீ சாயங்காலம் என்னோட வீட்டுக்கு வா!" என்று சொல்லிவிட்டு, வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்.

சாயங்காலம் சேகர் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றான். ஆசிரியர் அவனை அவர் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். தோட்டத்தின் கோடிக்குச் சென்று அங்கு மூடி வைத்திருந்த கூடையை அப்படியே தூக்கினார். அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த எட்டு கோழிகளும் தலைதெறிக்க ஓடின.  

ஆசிரியர் சேகரைப் பார்த்து, "அந்தக்  கோழிகளைப் பிடி..பிடி"  என்று கூவினார். சேகரும் அந்தக் கோழிகளை விரட்டிக்கொண்டு பின்னாடியே ஓடினான். சிதறி ஓடிய கோழிகள் நாலா திசையும் பறக்க, பரபரப்படைந்த சேகர், எதைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்துபோய் வந்தான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "சேகர், அதோ அந்த கருப்புக் கோழியை முதலில் பிடித்து வா. பிறகு மற்றவற்றைப் பிடிக்கலாம்' என்று கூறினார்.

சேகர் இப்போது அந்தக் கருப்பு நிறக் கோழியைக்  குறிவைத்து துரத்த, ஒரே நிமிடத்தில் அது ஓடி ஓடி களைப்படைந்து நிற்கவும் அதைப் பிடித்துவிட்டான்.

ஆசிரியர் அவனிடம் வந்து, "பார்த்தாயா சேகர்! ஒன்றை மட்டும் குறி வைத்ததால் எளிதாக வென்றுவிட்டாய். அதேபோல்தான் நானும் ஒரு பாடத்தை மட்டும் குறிவைத்து நடத்துகிறேன்" என்று அவனுக்கு விளக்கினார். சேகரும் புரிந்ததாகத் தலையாட்டினான்.

நீதி

'வாழ்க்கையில் ஒன்றை மட்டுமே  முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம்.'

*நன்றி : அண்ணா நகர் டெய்லி


 

சுத்தம் சுகம் தரும்*

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. ஆறாம் வகுப்பாசிரியர் திருத்திய விடைத்தாள்களுடன் வகுப்பறைக்கு வந்தார். வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் நேரே குமாரிடம்தான் வந்தார்.

"ஏண்டா அழுக்குச் சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய்" என்று இரகசியமாக அவனிடம் கேட்டார்.

'சாரி சார்... மறந்திட்டேன் சார்' என்று சமாதானம் சொன்னான் குமார்.

படிப்பில் முதலாவதாக மதிப்பெண் வாங்கும் குமார் ஏனோ தன்னைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டமாட்டான்.

காலையில் குளிக்க மாட்டான். பல நாள்கள் பல்லைக்கூட துலக்காமல் பள்ளிக்கு வருவான்.

கேட்டால், "யானை என்ன பல்லா விளக்குகிறது?" என்று கிண்டலாக திருப்பிக் கேட்பான்.

குமாரின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை அறிவுரை கூறியும் அவன் தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவே  இல்லை. ஆனால் அவன் கவனம் என்னவோ முழுக்க முழுக்கப் படிப்பிலேயே இருந்தது.

அரையாண்டுத் தேர்வு வந்த்து. குமார் விழுந்து விழுந்து படித்தான். எப்போதும்போல் முதல் மதிப்பெண்ணை வேறு யாரும் தட்டிச் சென்றுவிடக்காடாது என்பதில் கவனமாக இருந்தான்.

"டேய் குமார், குளிச்சிட்டுப் போய்ப் படிடா' என்று அம்மா சொன்னார்.

"குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்று படிப்பதிலேயே குறியாய் இருந்தான் குமார்.

தேர்வுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும்போது குமாருக்கு திடீரென்று பல்வலி ஏற்பட்டது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்குள் வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப் பகுதி பெரிதாக வீங்கிவிட்டது. 'விண் விண்' என்று வலித்தது. உடம்பு வேறு அனலாகக் கொதித்தது.

குமாரின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. குமார் புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் பல்வலியைத் தாங்க முடியவில்லை.

குமாரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். "பல்வலிக்குக் காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாகப்  பிடுங்க வேண்டும" என்றார் டாக்டர். காய்ச்சல் வேறு.

"தினந்தோறும் பற்களைச் சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது' என்றார் டாக்டர்.

குமார் சில நாட்கள் மருத்துவ மனையில் இருந்தான். குமாரால் அந்த அரையாண்டுத் தேர்வை எழுத முடியவில்லை.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் 'ரேங்க்' கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மதிப்பெண் கார்த்திக்" என்று வகுப்பாசிரியர் சொன்னதும் குமார் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. ஆசிரியர் அவனைச் சமாதானப்படுத்தினார்.

"சுவற்றை வைத்துத்தான் சித்திரம் எமுத வேண்டும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார் ஆசிரியர்.

குமார் மவுனமாக இருந்தான். அப்போதே அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

அடுத்த நாள் அவன் பள்ளிக்கு வரும்போது "அழுக்கு மாமா இப்போ 'லக்ஸ்' சோப்புக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல மாணவர்கள் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.

குமாரும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான்.

 * நன்றி: அண்ணா நகர் டெய்லி