தன்முனைப்புக் கட்டுரைகள்

பதிப்பு 1

 உழைப்பே உயர்வு தரும் - சிவ. சூரியன்

இளைஞனே, நீ பெயர் பெறவேண்டுமா? வான்புகழ் பெற வேண்டுமா?  உலகம் உன்னை மதிக்க வேண்டுமா? அப்படியானால் உழை; கடினமாக உழை. தொடர்ந்து உழை - உன் எண்ணம், குறிக்கோள் ஈடேறும்.

உழைப்பு பிழைப்பிற்கு மட்டும் வழியல்ல; உலகில் நீ நிலைத்து நிற்கவும் அதுதான் வழி. உழைப்பின் விளைவுதான் பெயரும் புகழும் செல்வாக்கும் மேன்மையுமாகும். உழைப்பை நீ மதித்தால் அது உன்னை மதிக்கும். நீ வாழ்க்கையில் உயர அது வழி வகுக்கும். உழைத்து உயர்ந்தவர்களை 'உத்தமர்கள்' என உலகம் பாராட்டும், போற்றும்.

உழைக்க நான் தயார்- ஆனால் வாய்ப்பு இல்லையே, , வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மக்கள் பெருக்கம். தேவை அதிகம். தேவை பெருகப் பெருக உழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

இடையில் ஏற்படும் தடைகள் உன்னைக் கண்ணீர் வடிக்கச் செய்யலாம். 'ஏன் பிறந்தோம்' என்று கூட நினைக்கத் தோன்றலாம். தளர்வடையாதே, துவண்டு போகாதே. தொடர்ந்து உழை. வெற்றி உனதே.

உழைக்காமல் ஊர் சுற்றுபவர்கள் ஒரு போதும் யாரும் மதிக்கமாட்டார்கள். உழைத்துத்தான் வழி தேட வேண்டும். அது உன்னைத் தேடி வராது. உழைப்பவர்கள் மட்டுமே உலக வரலாற்றில் இடம்பெற முடியும். கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும். நோபெல் பரிசு பெற முடியும். உழைக்காதவர்கள் உலக வரலாற்றை உற்றுப் பார்க்கக்கூட முடியாது. உழைக்காதவர்களை உலகம் உதறித் தள்ளிவிடும். உற்ற மனைவிகூட வெறுத்து விடுவாள். 'தண்டச்சோறு', 'உதவாக்கரை' என உலகம் எள்ளி நகையாடும். உடன்பிறப்புகள் உழைக்காதவர்களை புறக்கணிப்பார்கள். நண்பர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். உழைக்காதவர்களுக்கு உற்ற நண்பர்கள் இருக்கமாட்டார்கள். உழைக்காத கும்பல் நாளடைவில் கலைந்துவிடும்.

உழைப்பால் உயர்ந்தவர்களை உலகம் இனங்கண்டு கொள்ளும்; பாராட்டும்; புகழும். உழைப்பவர்கள் உலக வரலாற்றில் நிலையான இடம் பெறுவார்கள். அடுத்தடுத்து வரும் சமுதாயம் போற்றிப் பாராட்டும். அவர்களின் வரலாற்றையும் கோட்பாடுகளையும் விரும்பிப் படிக்கும்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காக்ஸ்டன்  அச்சகம் அமைத்து அரும்பெரும் சாதனை படைத்தவர். ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இன்று 'காக்‌ஸ்டன்' பெயர் உலக வரலாற்றில் நிலைத்து நிற்கக் காரணம் எது? 'உழைப்பு,' தொடர்ந்த உழைப்பு.

இரயில் இயந்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜார்ஜ் ஸ்டீபன்சன் உலகப் போக்குவரத்து வரலாற்றில் நிலைத்த பெயர் பெற்றது எப்படி? அவரின் உழைப்பேயன்றி வேறு யாது? தொலைநோக்கி, வெப்பமானி, திசைகாட்டும் கருவி, நிலத்தடி நீர் அறியும் கருவி ஆகியவற்றைக் கண்டுபிடித்து உலக சாதனை பெற்ற கலிலியோ, உலக வரலாற்றில் இடம் பெற்றது எதனால்? உழைப்பு, உழைப்பு - உழைப்பு மட்டுமே.

அமெரிக்க ஜனாதிபதி (அதிபர்) ஆபிரகாம் லிங்கன் உலக வரலாற்றில் அழியாத இடம் பெற்றதற்கு அடிப்படைக் காரணம், அவரது இடைவிடாத உழைப்பும் விடாமுயற்சியும்தான்.

உழைப்பில் முடிவு கிடையாது. தொடர்ந்து உழைக்க வேண்டும். உழைக்க உழைக்க உள்ளம் வலுப்படும்; உடல் வலிமையடையும். தொய்வு ஏற்பட்டால் தோல்வி தழுவிக் கொள்ளும்; துணையாகிவிடும். உழைப்பு நின்றுவிட்டால் பிழைப்பு படுத்துவிடும் - பிறகு தட்டி எழுப்புவது கடினமாகிவிடும்.

"சுறுசுறுப்பான உழைப்பே வெற்றிக்குச் சாவி" என்கிறார் ஜான்ரே என்ற உழைப்பாளி. உழைத்துப் பிழைக்க, உழைத்து உயர, உழைத்து சாதனை புரிய, உழைத்து உலக வரலாற்றில் நிலையான இடம்பெற, உழைக்கும் எண்ணம் வேண்டும். உழைக்கும் எண்ணம் இருந்தால் தடைகள் உடைத்தெரியப்படும், வழி தெரியும், வளர்ச்சிப் பாதை தெரியும்.

உழைத்துப் பிழைக்க முற்படும்போது சிற்சில பிரச்சினைகள் ஆங்காங்கே தலைதூக்குவது இயல்பே. அவற்றைக் கண்டு மனம் தளராமல், "அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் பிரச்சினைகளை அணுகினால், பிரச்சினைகளே தொழில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பாக மாறிவிடும்' என்கிறார் ராபர்ட் ஹில்லர் என்னும் அறிஞர்.

உழைத்துப் பிழைக்கக் கற்றுக்கொண்டால் யாருக்கும் நீ அடிமையாக வேண்டியதில்லை. உழைத்துப் பிழைக்க நீ உன்னை நன்கு அறிதல் அவசியமாகின்றது. உன்னை நீ அறிந்தால் உயர்வு உன்னை அரவணைக்கும்.

           ' உன்னை அறிந்தால்-நீ

             உன்னை அறிந்தால்

             உலகத்தில் போராடலாம்

             உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

             தலை வணங்காமல் நீ வாழலாம்'

என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளை நினைவில் கொள் - தனித் தெம்பு பிறக்கும்.

உழைப்பவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் பவனி வரலாம். இந்தத் துறையில் உழைத்தால்தான் முடியும் என்று எந்தத் துறைக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கிடையாது.

இராபர்ட்சன் என்பவர் பொறியியலாளராக  இருந்தவர். ஆட்குறைப்பால் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். உழைத்துப் பிழைக்கத் தெரிந்திருந்த அவர், தேனி வளர்க்க முற்பட்டார். வெற்றி பெற்றார். 'உதாரண புருஷன்' என்ற புகழையும் பெற்றார். இதற்குக் காரணம் விடாமுயற்சி. இரவு பகலாக்க் கடின உழைப்பு. வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டவர் பலருக்கு வேலை வாய்ப்பளித்தார். இதைத்தான் 'மேதை' அல்லது 'மேதைத்தனம்' என்கிறோம்.

"நமது ஓயாத உழைப்பால் வெற்றியை வளர்த்துக் கொள்வதுதான் திறமை எனப்படுகிறது. ஆனால் நம்மை அறியாமலே நமக்குள் இருக்கும் ஆற்றல், திறமை அசாதாரணமாக வெளிப்படுவது என்பது 'மேதைத்தனம்' எனப்படுகிறது" எனக் கூறுகிறார் வில்லியம் ஹெஸ்லிட்.

தனிப்பட்ட திறமையை மெருகூட்ட உழைப்பின் ஆற்றல் பெருகும் - வாழ்வு வளம்பெற அது வழி வகுக்கும். "உங்கள் தனிப்பட்ட திறமையை மெருகேற்றும் ஒரே வழி உழைப்பதுதான்" என்கிறார் அலெக்சாண்டர் போப்.

ரெடின் பெச்சர் என்பவர் மக்காச்சோளம் பயிரிடும் ஒரு விவசாயி. 'பாப்கான்' பொரிக்கும் 'சிவப்பு விரல்' என்னும் இயந்திரத்தை உருவாக்கினார். கோடி கோடியாகப்  பணம் சம்பாதித்தார். தொடக்கத்தில் எத்தனையோ இடர்ப்பாடுகள்; எனினும்,  உழைப்பின் மீதுள்ள பற்று இவரை உயர்த்தியது.

முதலில் குறிப்பிட்ட உண்மை நிகழ்வில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பொறியியலாளர் தேனி வளர்த்து அபார சாதனை படைத்தார். அடுத்த சம்பவம் விவசாயியாக இருந்தவர் 'பாப்கான்' பொரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து சாதனை புரிந்தவர். உழைப்பால் உயர்ந்த ஜிடிநாயுடு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். அறிவியல் துறையில் அபார  சாதனை படைக்கவில்லையா?

உழைத்துப் பிழைக்க முற்படும் இளைஞனே, முதலில் உன் தொழிலை நீ நேசிக்க வேண்டும். உழைப்பை மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும்; அதில் மனநிறைவு கொள்ள வேண்டும். அதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

பாட்டாளிகளின் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

            'செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்

             திறமைதான் நமது செல்வம்'

என்று பாடினார். அவரே மேலும் -

             'கையும்காலும்தான் உதவி- கொண்ட

             கடமைதான் நமக்குப் பதவி'

என்கிறார். தொடர்ந்து உழைத்தால் 'சாமி மறந்தாலும் இந்த பூமி நம்மை மறக்காது - அது நமக்கு தகுந்த பலனைத் தந்துவிடும்' என்ற கவிதை வரிகளையும் நினைத்துப் பாருங்கள்.  கவிஞரின் ஆணித்தரமான முடிவு 'உண்மையாய் உழைக்கின்றவர்களுக்கு எல்லாவித நன்மைகளும் நாடி வந்து கூடும்' என்பதே.

உழைப்பில் திருப்தி இல்லையெனில் அதன் காரணத்தை நன்கு அறிந்து, தேவையற்றதை நீக்கி திருப்தி அடைய வேண்டும். அப்பொமுதுதான் உயர்வை எதிர்பார்க்க முடியும். உழைப்பு மட்டுமே பிழைப்பு தரும்.

'உழைக்கின்ற நோக்கம் உறுதியாகிவிட்டால் யாரும் யாரையும் கெடுக்கிற நிலை அறவே மறைந்துவிடும்' என்ற பட்டுக்கோட்டைக் கவிஞரின் பாட்டு வரிகளை நினைவில் கொள்வோம்.

காலங்காலமாக நிலவும் நியதியான உழைக்காமல் 'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகம்' திருந்த ஒரு மருந்துண்டு என்கிறார் கவிஞர். அவர் சொன்ன அந்த மருந்து இதோ:

              'ஒடம்பை வளைச்சு நல்லா

              ஒழைக்கப் பாரு - அதில்

              உனக்கும்  உலகத்துக்கும் நன்மை இருக்கு'  

இடையூறுகள், ஆபத்துகள், பிரச்சினைகள், மன உளைச்சல்கள் முதலியன உழைப்பின் முன்னேற்றப் படிகள். இப்படிகளில் ஏறினால் வெற்றியின் உச்சியைத் தொட முடியும். எனவே, உழைக்கத் தொடங்குங்கள், உயர்வடைவீர்கள். உழைப்பு மட்டுமே உங்களுக்கு உயர்வு தரும்; உழைப்பு மட்டுமே உங்களுக்கு நிலையான புகழைத் தரும். உழைத்து உயர விரும்புகின்ற எவரும் உயர்வு பெறுவது உறுதி! உறுதி! உறுதி!