செய்திக் கதம்பம்

பதிப்பு 1

ஜெயந்தன் நினைவு சாதனையாளர் விருது - 2013

எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களை எண்பதுகள் வாக்கில் வாசித்துக் கொண்டிருந்தோருக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. பிறகு பிரபல பத்திரிகைகள் அவரைக் கண்டுகொள்ளாவிடினும், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். இன்னும் அச்சில் வருவதற்கு நிறைய இருக்கிறது. சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஓர் அறிவியல் சார்ந்த நாவல் எழுதத் திட்டமிட்டிருந்தபோது இன்னும் பத்து வருடங்கள் ஆகும் என்றார். காலனுக்குக் காது சரியாகக்க் கேட்கவில்லை போலும், பத்து நாட்களிலேயே வந்துவிட்டான்! 2010-ஆம் வருடம் பெப்ரவரி 07ஆம் நாள் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிட்டார். அன்று தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் அவரின் நினைவால் இலக்கியப் பரிசுகள் கொடுப்பது  என முடிவு செய்தனர் மணப்பாறை வாழ் ஆர்வலர்கள்.  மணவை தமிழ் மன்றம், மணவை செந்தமிழ் அறக்கட்டளை, ஜெயந்தனின் சிந்தனைக் கூடல் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முதல் வருடம் பத்து நூல்களுக்கும், இரண்டாம் வருடம் ஆறு நூல்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வருடம் ஆறு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு முதல் ஜெயந்தன் நினைவு சாதனையாளர் விருது வழங்குவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கு எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜெயந்தனின் நினைவாக அவரது சொந்த ஊரில் நூலகம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. நன்கொடைகள் வசூலிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த வருட நிகழ்ச்சிகள் விவரம் :-

நாள் : 29.9.2013 ஞாயிறு மாலை 5.30 மணி

இடம் : கோதாவரி ஹால்,  ஆந்திர சமூக மற்றும் கலாச்சார சங்கம்

விஜயராகவா சாலை

தி. நகர், சென்னை - 17

சிறப்புரை

திரு இரா. பார்த்திபன் அவர்கள்

கவிஞர், திரைப்படக் கலைஞர், இயக்குனர்

ஏற்புரை

திரு பிரபஞ்சன் அவர்கள்

எழுத்தாளர்

வாழ்த்துரை வழங்குவோர்

ஓவியர் டிராட்ஸ்கி மருது

கவிதாயினி இளம்பிறை

ஜெயந்தன் நினைவு சாதனையாளர் விருது - 2013

பெறுபவர் : திரு பிரபஞ்சன்

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் - 2013

விருது பெறுவோர்

நாவல்

குன்னிமுத்து - திரு குமாரசெல்வா

போதியின் நிழல் - திரு அசோகன் நாகமுத்து

சிறுகதை

கைம்மண் - திரு சுதாகர் கத்தக்

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - திரு மாரி செல்வராஜ்

கவிதை

மெஸ்ஸியாவுக்கு மூன்று முத்தங்கள் - திரு கதிர் பாரதி

அத்தருணத்தில் பகை வீழ்த்தி - திரு அகரமுதல்வன்

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரளாகத் திரண்டு வந்து இந்நிகழ்வு இனிதே நடைபெற ஆதரவு நல்கவேண்டும்  என அன்புக் கோரிக்கை விடுக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர். 

- சீராளன் ஜெயந்தன், சென்னை.