பழமொழி விளக்கம்*

பழமை + மொழி என்னும் இரு சொற்கள் இணைந்து வந்ததே 'பழமொழி' எனும் சொல். பழமையான மொழி என்பது இதன் பொருள். இதனை 'முதுமொழி,' 'முதுசொல்,' 'பழஞ்சொல்,' 'சொலவடை,' 'சொலவாந்திரம்,' 'நெடுமொழி,' 'மூத்தோர் சொல்,' 'மூதுரை,' 'பழம் வார்த்தை' என்றும் மொழிவர். பழமொழிகளை 'மக்கள் வாழ்க்கை அனுபவ உண்மைகளின் வெளிப்பாடுகள்' எனவும் 'அனுபவத்தின் குழந்தைகள்' எனவும் 'மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கருவிகள்' எனவும் அறிஞர்கள் வருணிக்கின்றனர்.

பழமொழிகள் பழமை, சுருக்கம்,தெளிவு, எளிமை உவமைப்பண்பு ஆகிய இயல்புகளின் அடிப்படையில் அமைந்தவை. இவை தொன்றுதொட்டு மக்களின் பேச்சுக்களால் பயின்று வருகின்றன. அனுபவம் வாய்ந்த முதியோர் இன்னும் தங்களின் பேச்சுகளுக்கு ஊடாக மிகுதியான பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவது அவர்களின் உரயாடல்களைப் பொருள் பொதிந்ததாகவும் செறிவாகவும் மாற்றுகின்றன.

சில தெரிவு செய்யப்பட்ட பழமொழிகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கீழே காணலாம்.

1.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

    அகம் என்பது மனம் அல்லது உள்ளம். மனத்தில் எழுகின்ற எண்ணங்களின் பிரதிபலிப்பு முகத்தில் தெரியும். ஒருவருடைய மன உணர்வை அல்லது மன நிலையை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் அவரது முகம் காட்டிவிடும். உள்ளத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி முகமாகும்.

2.   அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

    உலகில் அனைத்தும் இறைவனின் ஆணைப்படி நடக்கிறது. அந்த இறைவன் இல்லாவிட்டால் ஒரு சிறு அணுவும் அசையாது. இறைவனின் பேராற்றலினால்தான் உலகமும் உயிரினங்களும் இயங்குகின்றன.

3.   அழுத பிள்ளை பால் குடிக்கும்.

    குழந்தை பசியெடுத்து அழுதால் உடனே தாய் அதற்குப் பசிக்கிறது என்பதை உணர்ந்து பால் தருவாள். குழந்தை  பால் குடித்துப் பசியாறும். குழந்தை அழுது தனக்கு வேண்டிய பாலைப் பெற்றுக்கொள்வதைப்போல,  ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய ஒன்றைப்பெற முயற்சி செய்தால் தேவையானது கிட்டும். 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்கிறார் வள்ளுவர்.

4.  அறிவுடையாரை அரசனும் விரும்பும்.

         கற்றோருக்கு அரசரவையிலும் அமோக வரவேற்புண்டு.  கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு, மதிப்பு  என அறிவுடைமையின் பெருமையை வலியுறுத்துகிறது இப்பழமொழி.

5.  அள்ளாது குறையாது இல்லாது பிறவாது.

    எதுவும் நிகழாமல் எந்தப் பேச்சும் எழாது. 'நெருப்பில்லாமல் புகையாது' என்னும் பழமொழியை ஒப்புநோக்குக.

6.  அடாது செய்பவன் படாது படுவான்.

    திருடுவது, பொய் சொல்வது, ஏமாற்றுவது, கொலைசெய்வது  போன்ற தகாத செயல்களைச் செய்வோர் அவற்றுக்குரிய தண்டனைகளை நிச்சயம் பெற்றே தீருவர். ஆதலால் பிறருக்குத் துன்பம், தொல்லை விளைவிப்பது நமக்கு நாமே துன்பம் விளைவித்துக் கொள்வது போலாகும்.

7.  அன்பான நண்பனை ஆபத்தில் அறி.

    நமக்கு நேரிட்ட ஆபத்தில் தன்னுயிரையும் பெரிதாக மதியாமல் வந்து உதவி, நம்மை ஆபத்திலிருந்து காப்பவனே உண்மையான நண்பன்.  ஒருவன் நல்ல நண்பன் என்பதை அவன் நமக்குத்  தகுந்த நேரத்தில் வந்து உதவுவதிலிருந்து கண்டுகொள்ளலாம். 'உயிர் காப்பான் நண்பன்' எனும் பழமொழியையும் கருத்தில் கொள்க.

8.  அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

நடந்து முடிந்துவிட்ட ஒரு காரியத்தை அல்லது ஒரு நிகழ்வை அல்லது கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயன் ஏதுமில்லை. போனது போனதுதான். சென்றதை எண்ணி அல்லது நடந்து முடிந்ததை எண்ணி வருந்துவது வீண்.

9.  ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்.

    நடனம் ஆடத் தெரியாதவள் அல்லது இயலாதவள் அதை வெளிக்குக் காட்டாமல் மேடை கோணலாக இருக்கிறது என்பாள். தெரியாததைத் தெரியாது என்றும் தம் குறைகளையும் இயலாமையையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துணிவில்லாதவர்கள், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

10. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

நாம் எவ்விதமான காரியங்களைச் செய்தாலும் நமது நோக்கத்தில் வெற்றி பெறுவதில்  மட்டுமே நமது  முழு கவனத்தைச் செலுத்த வேண்டும். முக்கிய அல்லது முதன்மை  நோக்கத்தை மறந்துவிட்டுக் கருத்தை வேறொன்றில் செலுத்துவது அறிவீனமாகும். அவ்வாறு செய்தால் நமது நோக்கம் நிறைவேறாமல் போகும்.

11. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

         'ஆத்திரம்'  என்பது படபடப்பு, பரபரப்பு அல்லது சினம். ஆத்திரக்காரன் என்பவன்     பரபரப்புடையவன் அல்லது  கோபமுடையவன். பரபரப்போ கோபமோ அடையும்போது ஒருவன் தன் நிதானத்தை, தன் நிலையை  இழந்துவிடுவான். அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு யோசிக்கும் நிலையில் அவன் இருக்கமாட்டான். அதனால் அவ்வேளையில் அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் தவறாகவே போகும்; அவை அவனுக்குத் துன்பம் தரும். ஆத்திரமும் பரபரப்பும் அறிவுக்குச் சத்துருவாகும். அவ்வையார் 'ஆத்திரப்படேல்' என்று கூறியிருக்கிறார். எனவே, நாம் ஆத்திரத்தை அடக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.  

12. ஆழம் அறியாமல் காலை விடாதே.

நீரின் ஆழத்தை அறியாமல் அதில் திடீரென்று காலைவிட்டால், நீரினுள் மூழ்க நேரிடும். ஆழமறிந்து அதில் இறங்க வேண்டும். அதைப்போன்று எந்தச் செயலிலும் ஆராய்ந்து பார்த்து இறங்க வேண்டும். அவ்வாறு செய்தால் பின்னால் வருந்த வேண்டியிராது; துன்பம் நேரிடாது. எனவே,  எந்தக் காரியமானாலும் நன்கு ஆலோசித்து, ஆராய்ந்து, சிந்தித்துச் செய்ய வேண்டும்.  இதனையே திருவள்ளுவர் 'எண்ணித் துணிக கருமம்' என்றார்.

13. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்.

ஒரு காரியத்தில் உறுதியாக நின்று செயலாற்ற வேண்டுமே தவிர, இங்கொன்றும் அங்கொன்றுமாக வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படியிருப்பின் எதையும் செம்மையாகச் செய்ய முடியாது. இப்பழமொழிக்கு வேறுவிதமாக விளக்கம் சொல்ல வேண்டுமாயின், நாம்  மேற்கொண்டுள்ள  செயலை முழுமையாகச் செய்துவிட்டுத்தான் மற்றதைப்பற்றிச்  சிந்திக்க வேண்டும். இல்லையெனில் இரண்டும் கெட்டுவிடும்.  எனவே,  ஒன்றைச் செய்ய வேண்டும்; அதனையும் நன்றே செய்ய வேண்டும். இதன் மூலம் ஒன்றிலாவது நாம் முழு வெற்றியைப் பெறலாம்.

14. இளங்கன்று பயம் அறியாது.

கன்றுக்குட்டியைக் கட்டவிழ்த்துவிட்டால் அது அங்குமிங்கும் துள்ளி ஓடும். அதற்கு அவ்வளவாக அனுபவம் இல்லாதபடியால் அது எதில் தனக்கு ஆபத்து உள்ளது என்பதை அறியாது. அதனால் அது பயமறியாமல் அங்குமிங்கும் அலைந்து பின் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்வதுண்டு. அவ்வண்ணமே இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தின் நன்மை தீமை அல்லது பின்விளைவுகள் பற்றி எண்ணிப் பாராமல் அதில் துணிவுடன் இறங்கிவிடுகிறார்கள். செய்யலாமா கூடாதா என்று ஆராய்ந்து பார்க்க இளமை அவர்களை விடாது.

15. இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து.

கல்வி கற்பதற்குரிய காலம் இளமைப் பருவமே. இளமையில் மனம் தெளிவாக இருக்கும். எதையும் எளிதில் கிரகித்து நினைவில் கொள்ளும்  ஆற்றல் இருக்கும். அந்த இளமைக்காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப்போல் மனத்தில் நிலையாக நன்குப் பதிந்து நிற்கும். ஆதலால், இளமைப் பருவத்திலேயே படிக்க வேண்டிய அனைத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.  'இளமையிற் கல்' என அவ்வையார் வலியுறுத்தியுள்ளதையும் நினைவில் கொள்க.

16. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாட்டுக்கு அங்குள்ள புல்லைவிட மறுகரையில் உள்ள புல் கண்ணுக்குப் பசுமையாகத் தெரியும். அங்குப் போய் மேயலாமே என்னும் எண்ணம் அதற்குத் தோன்றும்.  அங்கும் புல்தான் இருக்கிறது என்று சென்று பார்த்த பின்னரே தெரியும். ஆகவே, தோற்றத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது. ஒருவன் தன்னிடம் எவ்வளவுதான் நிறைகள்இருந்தாலும் அடுத்தவரிடம் உள்ளதையே பெரிதாக எண்ணுவது மனித இயல்பு எனவும் இப்பழமொழிக்குப் பொருள் கொள்ளலாம்.

17. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

உணவுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது உப்பு. உப்பில்லாவிடில் உண்ண முடியாது. உப்பில்லாப் பண்டம் குப்பையில்தான். உணவுக்கு உப்பு உதவுவது போல, நம் வாழ்க்கையில் முக்கியமானவராக இருந்து நமக்குப் பேருதவி செய்தவரை நாம் இவ்வுலகில் வாழும்வரை நன்றியோடு நினைக்க வேண்டும். நமக்கு உண்ண உணவு கொடுத்தவரை உயிர் உள்ளளவும் உயர்வாய் எண்ணவேண்டும் என்றும் இப்பழமொழிக்குப் பொருள் கொள்ளலாம்.

18. ஊருடன் கூடி வாழ்.

எப்போதும் நம் அண்டை அயலாருடன் ஒத்து வாழவேண்டும். அவர்களைப் பகைத்துக் கொண்டால் நாம் நல்லுறவுடன், நல்லிணக்கத்துடன், அமைதியுடன், நிம்மதியுடன் வாழமுடியாது. நமக்கு ஆபத்தில் உதவுபவர்கள்  நம் ஊரார்களே. எனவே அவர்களுடன் ஒற்றுமையுடனும்  நல்லிணக்கத்துடனும்  வாழ்வதே சிறப்பாகும். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்னும் பழமொழியையும் கருத்தில் கொள்க.

19. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

அம்பு தானாக வில்லிலிருந்து பாய முடியாது. அந்த அம்மை எய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் அம்பை எய்திருக்க அவனை நோவாமல்  அம்பை நோவது (குறைகூறுவது) எதனால்?  குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க மற்றவனைக் குறை சொல்லி, அவனை நொந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை.

20. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

எறும்புகள் மீண்டும் மீண்டும் ஒரு கல்லின்மீது ஊர்ந்து சென்றால் அந்தக் கல் தேய்ந்து போகும். தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எத்துணைக் கடினமாயினும் நாளடைவில்  அது மிகவும் எளிதாகிவிடும். சுலபமாகச் செய்து முடித்து விடலாம்.  'அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்,'  'முயன்றால் முடியாதது இல்லை,' 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்,' 'முயற்சி திருவினை ஆக்கும்' - இவற்றையும் ஒப்பு நோக்குக.

21. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

ஐந்து வயதில் குனிந்து நிமிர்ந்து உடலை வில்லாய் வளைக்கும் பயிற்சியைப் பெற்றால், ஐம்பது வயதிலும் அவ்வாறு செய்ய முடியும். பயிற்சியே அதற்குக் காரணம். ஐந்து வயதில் இத்தகைய பயிற்சி பெறாமல் ஐம்பது வயதில் பெறுவது இயலாது. எதையும் இளமைக் காலத்தில் சுலபாகவும்  விரைந்தும் கற்றுக்கொள்வது எளிதாகும். எந்த ஒரு நல்லப்  பழக்கத்தையும் உடனே வழக்கிற்குக் கொண்டுவர முடியாது. இளவயதிலிருந்தே நல்லப் பழக்கங்களை நாம் நடைமுறைப்படுத்திக் / வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் அவை முதுமையிலும்  அல்லது நம் வாழ்நாள் முழுவதும் நம்முடன் தொடர்ந்து வரும். 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்னும் பழமொழியையும் கருத்தில் கொள்க.

22. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

மக்கள் ஒன்றிணைந்து,  ஒருமித்து,  ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் செயல்பட்டால் நல்வாழ்வு அமையும். இதனையே 'ஒற்றுமை உயர்வு தரும்,' 'ஒற்றுமையே பலம்,' 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' எனும் பழமொழிகளும் உணர்த்துகின்றன.

23. ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்.

கூட்டம், குழு, குடும்பம், சங்கம்,  நிறுவனம் ஆகியவை சிலர் சேர்ந்த ஓர் அமைப்பாகும். அவற்றின் உறுப்பினர்கள் இணக்கத்தோடும் ஒற்றுமையோடும் செயல்பட வேண்டும்.  ஒற்றுமை இல்லாவிடில் முடிவில் அந்த அமைப்பே இல்லாமற் போகும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும் என்றும் பொருள் கொள்ளலாம். ஒற்றுமையின் இன்றியமையாமையை இப்பழமொழி வலியுறுத்துகிறது.

24. ஒரு காசுப் பேணின் இரு காசு தேறும்.

பணத்தைச் சேமிப்பது அல்லது சேர்ப்பது  என்பது சுலபமான காரியமல்ல. ஒவ்வொரு காசையும் கருத்துடனும் கவனத்துடனும் சேர்த்தால் அல்லது சேமித்தால் நாளடைவில் அது கணிசமான தொகையாகிவிடும். ஒரு காசுதானே என்று அலட்சியமாக எண்ணாமல் அதனையும் சிறுகச் சிறுக சேர்க்க வேண்டும்.

     * சி.வேலுசுவாமி அவர்களின் பழமொழி விளக்கமும் இலக்கணச் சுருக்கமும்  எனும் நூலிலிருந்து (சில மாற்றங்களுடன்)