கவியரசு வைரமுத்துவின் கவிதைகள்

 

பதிப்பு 1

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.

இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.

நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.

யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.

ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.

எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.

இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.

நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.

நட்பு

நட்பு என்பது

சூரியன் போல

எல்லாநாளும்

பூரணமாய் இருக்கும்.

நட்பு என்பது

கடல் அலை போல

என்றும்

ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது

அக்னி போல்

எல்லா மாசுகளையும்

அழித்து விடும்

நட்பு என்பது

தண்ணீர் போல்

எதில் ஊற்றினாலும்

ஒரே மட்டமாய் இருக்கும்.

நட்பு என்பது

நிலம் போல்

எல்லாவற்றையும் பொறுமையாய்

தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது

காற்றைப் போல்

எல்லா இடத்திலும்

நிறைந்து இருக்கும்

சுனாமி

ஏ கடலே

உன் கரையில் இதுவரையில்

கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்

முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே

நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா

முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நாங்கள் கூறுகட்டியதற்காக

எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா

புதை மணலுக்குள்

புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்

பெற்றவளைத் தேடினோம்

அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது

பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு

மரணம்

தனியே வந்தால் அழகு

மொத்தமாய் வரும் மரணத்தின் மீது

சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்

அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை

எதிர்கொண்டால் மனிதன்.