வாலிபக் கவிஞர் வாலியின் கவிதைகள்

பதிப்பு 1

இரங்கல் கவிதை

(கவியரசு கண்ணதாசன் 1981-ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் நாளன்று மறைந்தபோது கவிஞர் வாலி எழுதிய இரங்கல் கவிதை இது).

கண்ணதாசனே! - என் அன்பு நேசனே!

நீ

தாடியில்லாத தாகூர்!

மீசையில்லாத பாரதி!

சிறுகூடற் பட்டியில்

சிற்றோடையாய் ஊற்றெடுத்து

சிக்காகோ நகரில்

சங்கமித்த ஜீவ நதியே!

உனக்கு

மூன்று தாரமிருப்பினும் -உன்

மூலாதாரம் முத்தமிழே!

திரைப் பாடல்கள்

உன்னால்-

திவ்வியப் பிரபந்தங்களாயின!

படக் கொட்டகைகள்

உன்னால்

பாடல் பெற்ற ஸ்தலங்களாயின!

நீ

ஆண் வேடத்தில்

அவதரித்த சரஸ்வதி!

கண்ணனின் கைநழுவி

மண்ணில் விழுந்த

புல்லாங்குழல்!

அயல் நாட்டில்

உயிர் நீத்த

தமிழ்நாட்டுக் குயிலே!

பதினெட்டுச்

சித்தர்களுக்கும்

நீ

ஒருவனே

உடம்பாக இருந்தாய்!

நீ

பட்டணத்தில் வாழ்ந்த

பட்டினத்தார்!

கோடம்பாக்கத்தில்

கோலோச்சிக் கொண்டிருந்த

குணங்குடி மஸ்தானே!

நீ

தந்தையாக இருந்தும்

தாய் போல்

தாலாட்டுக்களைப் பாடியவன்!

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல-

எங்கள் நாக்குகளிலும்

உன்

படப் பாடல்கள்

பதிவாகி யிருக்கின்றன!

உன்

மரணத்தால்

ஓர் உண்மை புலனாகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத

எத்துணையோ பேர்களில்

எமனும் ஒருவன்.

அதனால்தான்

ஓர் அழகிய கவிதைப் புத்தகத்தைக்

கிழித்துப் போட்டுவிட்டான்!

என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து

எத்தனை சொந்தம் என் வாழ்வில்

வந்தாலும் அம்மா

உன் ஒற்றை பார்வையின் பந்தம்

எதுவும் தந்த்தில்லை

உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில்

மறைத்தாய் அம்மா

இத்தனைநாளும் அது எனக்கு

விளங்கியதில்லை

நான் வளரும் ஒவ்வொரு நொடியும்

உனக்கு பாரம் தான்

தெரிந்தும் சுமக்கிறாய்

பத்து மாதம் வரை அல்ல

உன் ஆயுள் காலம் வரை

உன் காலம் நரைக்கும் நேரத்தில்

என் நேரம் உனக்காய்

இருக்க போவதில்லை

தெரிந்தும்

காக்கிறாய் உன்

இமைக்குள் வைத்து என்னை

கடமைக்காக அல்ல

கடனுக்காக அல்ல

கடவுளாக

உன் வாழ்வின் ஒரு பாதி

உன் பெற்றோருக்காய்

மறு பாதி உன் பிள்ளைகளுக்காய்

மனதார பகிர்ந்தளித்து விட்டாய்

என்றாவது உனக்காய் வாழும்

உத்தேசம் உண்டா

உன் அன்னைக்கு என்ன கைமாறு

செய்தாலும் உன்னை எனக்கு

தந்ததிற்கு ஈடாய்

ஒன்றும் செய்ய இல்லாமல்

முடமாய் நிற்கிறேன்

ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை

இனி ஒரு ஜென்மம்

இருந்து உயிரினமாய் பிறந்தால்

உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம்

மட்டும் போதும்

ஒரேஒரு வேண்டுகோள் உன்னிடம்

இன்று மட்டுமாவது

உனக்காய் வாழ முயற்சிசெய்

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்